கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை சிலர் மிதிக்காமல் வணங்கி தாண்டிச்செல்வது ஏன்?

– நாராயணன், கூறைநாடு.

கோயில் நுழைவாயில் மட்டுமல்ல, நமது வீட்டில் உள்ள நுழைவாயில் படியினையும் மிதிக்கக் கூடாது. வாயில் படியில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். த்வார மஹாலட்சுமி என்று சொல்வார்கள். வாயிற்படி அமைக்கும்போது அதற்கு கீழே தங்கம், வெள்ளி முதலான பஞ்சலோகத்தையும் முத்து, பவழம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வைத்து அதன்மீது வாயில்படியை நிறுத்துவார்கள். வெள்ளிக் கிழமைகளில் நம் வீட்டுப் பெண்கள் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைப்பதும், வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், விசேஷ நாட்களில் மாலை அணிவித்து வணங்குவதும் மஹாலட்சுமி வாயிற்படியில் வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில்தான். அதனால்தான் நம்மவர்கள் கோயில் உட்பட அனைத்து இடங்களிலும் வாயில் படியினை மிதிக்காமல் தாண்டிச் செல்கிறார்கள்.

?திங்கள் என்பது ஒரு கிழமையின் பெயர்தானே, இதனை மாதத்தின் பெயருடன் இணைத்து சித்திரைத் திங்கள், ஜனவரித் திங்கள் என்றெல்லாம் அழைப்பதன் காரணம் என்ன?

– முத்துமீனா, மேலூர்.
தமிழ்மொழியில் மாதங்களைத் ‘திங்கள்’ என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. திங்கள் என்பது கிரஹங்களில் சந்திரனைக் குறிப்பதாகும். ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தையே மாதத்தின் பெயராகக் கொண்டனர். உதாரணத்திற்கு, சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்திலும், வைசாகம் எனப்படும் வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும் என 12 மாதங்களும் பௌர்ணமி வருகின்ற நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மாதங்கள் பௌர்ணமி சந்திரனோடு தொடர்புடையவை என்பதால் அவற்றை ‘திங்கள்’ என்று தமிழ்ப் பெயராகச் சொல்கிறார்கள். தற்கால நடைமுறையில் ஒருசிலர் ஆங்கில மாதங்களையும்கூட ஜனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்! சித்திரை, வைகாசி போன்ற தமிழ் மாதங்களை மட்டும்தான் திங்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கில மாதங்களையும் இதே நடைமுறையில் சொல்வது முற்றிலும் தவறு.

?கடைப்பிடிக்க வேண்டிய இறை வழிபாட்டை கூறுங்கள்.

– எஸ்.எஸ்.புலவன், மயிலாடுதுறை.தினசரி சிவ தரிசனம் செய்யுங்கள். ஆரோக்யத்தோடு சேர்த்து அனைத்து குடும்ப நலன்களையும் இதுவே கொடுத்துவிடும். யோக பாஷ்யம் என்கிற நூலில் ‘‘ப்ரணிதானம் ஸர்வக்ரியானாம் பலதாயகம்’’ என்று கூறப்பட்டுள்ளது. சிவாலய வழிபாடு குடும்பஸ்தர்கள் நோய் நொடியின்று வாழ வழி வகுக்கும். ‘‘ஹாலாஸ்ய பதே!! ஹாலாஸ்ய பதே’’ என்று உள்ளம் உருக ஈசனைக் குறித்து சொல்லுங்கள். அனைவருமே குறைகள் எதுவுமின்றி வாழலாம்.

?பிராணாயாமம் என்பது என்ன?

– தி.நாகராஜன், சிதம்பரம்.
பிராணாயாமம் என்பது பிராணன், அபானன் என்ற இரு வாயுக்களையும் சுவாசத்தினால் இணைப்பது. அப்படி இணைத்துச் செல்லும் பிராணமான வாயுவானது, பின் கழுத்துக்கு கீழே உள்ள நாடி வழியாக செல்லுகிறது. புத்தி, உடல் இரண்டையும் நன்கு செயல்பட வைக்கிறது. இதை கட்டுப்பாட்டில் வைத்து மூச்சுப் பயிற்சி செய்தோம் என்றால் பிராண சக்தியை சரிவரப் பயன்படுத்தும் ரகசியம் புரிந்துவிடும். மனம் தெளிவாகும். மனம் தெளிவாக இருக்கும் பொழுது, தியானம் வசப்படும். எனவேதான் ஆன்மிகத்தின் ஒரு பகுதியாக யோகமாகிய பிராணாயாமத்தைப் பற்றி சொல்லுகிறார்கள்.

?கோயில் விழா, சுபவிசேஷங்களில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூரண கும்ப மரியாதை செய்கிறார்களே, ஏன்?

– ஹரிராம், சிவராம், சென்னாவரம்.
பூரண கும்ப மரியாதை என்பது இறைவனுக்கு உரியது. இறை மூர்த்தங்கள் திருவீதி உலா வரும்போது இறைவனை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே பூரண கும்ப மரியாதையைச் செய்வார்கள். நாட்டை ஆளும் அரசனை ஆண்டவனின் பிரதிநிதியாக மக்கள் கருதியதால் அரசன் வரும்பொழுதும் அதே மரியாதையைச் செய்தார்கள். சந்யாசிகள், மடாதிபதிகள் ஆகியோரும் நம்மை வழிநடத்திச் செல்பவர்கள் என்பதாலும், மகான்களை கடவுளின் அவதாரமாக நாம் கருதுவதாலும் அவர்களுக்கும் பூர்ண கும்ப மரியாதையைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் தற்காலத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் சிறப்பு விருந்தினர்களுக்கும் பூரண கும்ப மரியாதை செய்கிறார்கள். பூரண கும்ப மரியாதையை யாருக்குச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வகுத்துக் கொடுத்துள்ளது. விழாக்குழுவினர் அதனை முழுமையாக அறிந்துகொண்டு பூரண கும்ப மரியாதைக்கு ஏற்பாடு செய்வது நல்லது. நம்மைக் காக்கின்ற கடவுளுக்கும், கடவுளாக நாம் பாவிக்கின்ற மனிதர்களுக்கும் மட்டுமே பூரண கும்ப மரியாதையைச் செய்ய வேண்டும்.

அருள்ஜோதி

The post கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை சிலர் மிதிக்காமல் வணங்கி தாண்டிச்செல்வது ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: