பகுதி 2
மன்னருக்கு எல்லையில்லாத ஒரு நிம்மதி பரவியது. உடனே வில்வமங்களிடம் ஓடி, அவர் திருவடிகளில் விழுந்தார். “ஸ்வாமி! அடியேனுக்குக் கண்ணனை நேருக்கு நேராகத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. தாங்கள்தான் அதற்கு உதவி செய்ய வேண்டும்!” என வேண்டினார்.
மன்னரின் ஆர்வத்தையும் பக்குவத்தையும் உணர்ந்தார் வில்வமங்கள்; பக்தி மார்க்கத்திற்கான வழியை உபதேசித்தார். “கண்ணனை நீங்கள் நேருக்கு நேராகத் தரிசிப்பீர்கள்!” என்று ஆசி கூறி வழியனுப்பி வைத்தார்.திரும்பிய மன்னர், குருநாதர் சொன்ன பக்தி மார்கத்திலேயே தீவிரமாக ஈடுபட்டார். அதன் விளைவாக, தான் ஏற்கனவே எழுதிய ‘கிருஷ்ண கீதி’ என்ற நூலைத் தழுவி, ‘கிருஷ்ணனாட்டம்’ என்ற நூலையும் செய்தார்.
அந்த நூலில் கண்ணனின் திரு அவதாரம் தொடங்கி, கண்ணன் பூலோகத்தைத் துறப்பதுவரை உள்ள நிகழ்வுக ளை, பல்வேறு விதமான பாடல் வகைகளில் இசைக்கு ஏற்றாற்போல் அமைத்தார் அரசர். இந்தச் சரித்திரத்தை, ஏழு நாட்கள் நாடகமாக, மலையாள சம்பிரதாயத்தில் அபினயித்து (இசை – நாட்டியம் கலந்த நாடக வடிவில்) காண்பிக்கத் தொடங்கினார்கள். தான் எழுதிய நூல் நாடகமாக நடிக்கப்படுவதைக் கண்டு அரசர், மகிழ்ந்தார்; குறிப்பாகக் கண்ணன் வேடம் கண்டு, அவர் மனம் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
குருவாயூரில் மன்னர் எழுதிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. மன்னரின் மனமோ குரு உபதேசத்திலேயே ஆழ்ந்து கண்ணனை நேரே தரிசிப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தது. நாடகம் நடந்த மேடைக்கு அருகே, ஓர் இலஞ்சி மரம் இருந்தது.ஒருநாள்… அந்த இலஞ்சி மரத்தினடியில் ஸ்ரீகிருஷ்ணன் மலர்களைப் பறித்துக் கொண்டிருப்பதைக் கண்டார் மன்னர்; நேரே கண்ணனைத் தரிசித்த மன்னருக்குக் கண்ணனைக் கட்டித் தழுவ வேண்டும் என்ற ஆர்வம் உண்டாக, “கண்ணா!கண்ணா!”என்று கூவியபடியே கண்ணனை நோக்கி ஓடினார், மன்னர்.
“இத்தகவலை வில்வமங்களன் என்னிடம் சொல்லவில்லையே!” என்ற கண்ணன், மன்னர் பார்வையிலிருந்து மறைந்தார். அந்த நேரத்தில், கண்ணன் திருமுடியில் அலங்கரிக்கப்பட்ட மயிலிறகு, மன்னரின் கைகளில் சிக்கியது.மன்னர் மனம் வருந்தினார். உண்மை புரிந்தது அவருக்கு; “தவறு என் மீதுதான். குருநாதரிடம் கண்ணனை நேருக்கு நேராகத் தரிசிக்க வேண்டும்’ என்றுதானே கேட்டேன். அவரும் அருள் புரிந்தார். குருவருள், கண்ணனை நேரே நிறுத்தித் தரிசிக்கச் செய்தது. கண்ணனைத் தழுவ வேண்டும் என குருவிடம் கேட்க வில்லையே! இது என் தவறல்லவா?” எனத் தெளிவு பெற்றார் மன்னர்.கண்ணன் திருமுடியை அலங்கரித்த மயிலிறகு, மன்னர் கைகளில் சிக்கியது என்று பார்த்தோமல்லவா?
அந்த மயிலிறகை மன்னர், கிருஷ்ணாட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் கிரீடத்தில் கட்டி வைத்தார். அதன்பின் மன்னர், கண்ணனைத் தரிசித்த ஆனந்தத்திலேயே வாழத் தொடங்கினார். வில்வமங்களுக்காக, மன்னருக்குக் காட்சி தந்த கண்ணன், மற்றொரு பக்தைக்காக வில்வமங்கள் வாழ்வில் நடத்திய நிகழ்வு… வில்வமங்கள் வாழ்ந்த அதே காலத்தில், ‘குரூரம்மை’ எனும் பெண்மணியும் அங்கு வாழ்ந்து வந்தார். குரூர்மனையைச் சேர்ந்த அவரை, அதன் காரணமாகவே குரூரம்மை என அழைத்தார்கள்.
நாம சங்கீர்த்தனப் பிரபாவத்தை வெளிப்படுத்தி, பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக ஸ்ரீதேவியே, பகவான் உத்தரவுப்படி குரூரம்மையாக வந்ததாக ஒரு வரலாறு, கேரளத்தில் மிகவும் பிரபலமானது. குரூரம்மையின் அசஞ்சலமான – நிலையான பக்தி கண்டுபகவான் கண்ணனே, குரூரம்மையின் இல்லத்திற்குக் குழந்தையாக வந்து தங்கி, குரூரம்மையின் தாயன்பை முழுமையாக அனுபவித்தார். குரூரம்மையும் கண்ணனைத் தன் சொந்தக் குழந்தையாகவே பாவித்து நடந்து வந்தார்; கொஞ்சுவது, சேஷ்டை செய்தால் கெஞ்சுவது, மிஞ்சினால் மிரட்டுவது, மடியில் தூக்கிப் போட்டுத் தாலாட்டுவது என அனைத்தையும் செய்து வந்தார், குரூரம்மை.
கண்ணனும் அதேபோலத்தான்! கோகுலத்தில் பாதச் சிலம்புகள் ஓசையெழுப்ப ஓடியதைப்போல் ஓடுவது; குரூரம்மையின் மடியில் இருக்கும்போது, அவர் முகத்தைப் பார்த்து ‘களுக்’கென்று சிரிப்பது; விளையாடுவது என அனைத்து விதமான லீலைகளையும் செய்து, குரூரம்மையை மகிழ்வித்து வந்தார்.குரூரம்மை,சாதுக்களைப் பூஜிப்பதுதான் ஈஸ்வர பூஜை என்ற எண்ணம் கொண்டவர். கண்ணன், தான்பெற்ற பிள்ளையைப் போலக் கூடவே இருந்தாலும்; சாதுக்களைப் பூஜிப்பதிலும் அதிதிகளைப் பூஜித்து உபசரிப்பதிலும் குரூரம்மை பின் வாங்கியதே இல்லை.
சாதுக்களுக்கோ – அதிதிகளுக்கோ உண்டான உபசரிப்பில் குரூரம்மை மூழ்கியிருக்கும்போது, சில சமயங்களில் கண்ணன் அங்கு வந்து சேஷ்டைகள் செய்வார். குரூரம்மை, “டேய்! படுத்தாதே! சமர்த்தாக இரு!” என்றெல்லாம் மிரட்டுவார்.
கண்ணனும் சமர்த்தாக நகர்வதைப்போல நகர்ந்தாலும், கண்ணனின் கண் களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டு உதிர்ந்து விழும்; அதைக்கண்டு பதறுவார் குரூரம்மை; கண்ணனை அப்படியே வாரியெடுத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு ஆறுதல் கூறுவார். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்?
கண்ணன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் காணச் சகிக்காத குரூரம்மை, தானே ஆனந்தக் கண்ணீர் சிந்துவதும் உண்டு. எதற்காக?
வில்வமங்களின் இல்லத்தில் அவருடன் கூட, பகவானும் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் குரூரம்மைக்கு எட்டியது; பகவானின் அந்த எளிமையை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார் குரூரம்மை. அது மட்டுமல்ல! உத்தம பக்தரான வில்வமங்களைத் தன் வீட்டிற்கு அழைத்துப் பூஜித்து, அவருக்குப் பிட்சை அளிக்கவும் விரும்பினார் குரூரம்மை; அதைத் தகுந்த ஓர் ஆள் மூலம், வில்வமங்களிடம் தெரிவிக்கச் செய்தார். அழைப்பை ஏற்ற வில்வமங்கள், “அந்த உத்தமியின் அழைப்பை ஏற்கிறேன்” எனப் பதில் சொல்லி அனுப்பினார்.
சொல்லி அனுப்பி விட்டாரே தவிர, அதை மறந்து விட்டார் வில்வமங்கள். குரூரம்மையின் வீட்டிற்குப் பிட்சைக்கு வருவதாகச்சொன்ன அந்த நாளில், கண்ணனைப் பற்றிய ஏகாக்கிர சிந்தனையோடு வேறெங்கோ போய் விட்டார். அங்கே குரூரம்மையோ, தன் பரிவாரங்களுடன் வில்வமங்களின் வருகைக்காகக் காத்திருந்தார்; பூஜை செய்யத் தகுந்த பொருட்களுடன் தயாராக இருந்தார். கண்ணன் மேற்பார்வை பார்த்தவாறு இருந்தார்.
குரூரம்மையின் மனதில் எந்தவிதமான கிலேசமும் உண்டாகவில்லை. கண்ணனே தன் திருக்கரங்களால் எல்லா ஏற்பாடு களையும் செய்திருக்கும்போது, குரூரம்மா ஏன் சஞ்சலப்பட வேண்டும்? குறிப்பிட்ட நேரம் கடந்து, இரவு நெருங்கியது. நாள்தோறும் சாதுக்களுக்கான பூஜை – உபசரிப்பு முடிந்துதான் குரூரம்மை உணவு ஏற்பார்; குரூரம்மை உணவேற்கும்போது தான், கண்ணன் உணவேற்பார். அன்று அங்கு யாரும் உணவு உண்ணவில்லை.
நேரம் கடந்தும் வில்வமங்கள் வராததால், குரூரம்மை மனம் வருந்தினார்; தன் மன வருத்தத்தைக் கண்ணனிடம் சொல்லியவாறே, உணவு உண்ணாத நிலையில் வெறுந் தரையில் படுத்தார். குரூரம்மையின் மன வருத்தத்தைப் போக்க, கண்ணனும் பலவிதமான முயற்சிகளைச் செய்தார்.இதற்கெல்லாம் காரணமான வில்வமங்களோ, கண்ணனுடைய லீலைகளை மனதில் நினைத்து அனுபவித்துக் கொண்டிருந்தாரே தவிர, குரூரம்மை வீட்டிற்குப் பிட்சைக்கு வருவதாக ஒப்புக்கொண்ட நினைவே இல்லாமலிருந்தார்.
மறுநாள் அதிகாலை நேரம்! வில்வமங்களம் தன் வழக்கப்படி ஆராதனைக்கான ஸ்ரீகிருஷ்ணனைக் காணாமல் தவித்தார். ஆம்! வழக்கப்படி அவருடன் சிரித்துப் பேசி விளையாடும் கண்ணன், அன்று வரவில்லை. வில்வமங்களின் மனம் அலை பாய்ந்தது. “கண்ணா! கண்ணா!” என்று கதறி அலைந்தார்.ஏழை ஒருவர் ஏழையாகவே இருந்து விட்டால், அவர் மனம் அந்த அளவிற்குத் துயரத்தை அனுபவிக்காது. ஆனால், அதே ஏழை செல்வந்தனாகிச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும்போது, அவர் பழையபடியே ஏழ்மை நிலையை அடைந்தால்… அப்போது அவர் மனம் படும்பாடு சொல்லி முடியாது. அந்த ஏழையின் நிலையில்தான் இருந்தார் வில்வமங்கள்.
பி.என். பரசுராமன்
