நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தில் கோயிலின் திருமறைக்கதவு மூடியே கிடக்கின்றது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருகே நின்று கொண்டிருக்கின்றனர்.‘ ‘வேதாரண்யேஸ்வரா… மறைக்காடனே… தாங்களை தரிசிக்கும் பொருட்டு வந்துள்ள இவ்விரு அடியார்களுக்கும் முன்புள்ள இந்தக் கதவை திறந்தருள்வாயா’’ என்று ஞானசம்பந்தப் பெருமான் வேண்டிக் கொண்டார்.மறைக்கதவு மௌனம் பூண்டது. திருஞானசம்பந்தர், ‘‘அப்பரே இக்கதவின் பூட்டைத் திறக்குமாறு அற்புதப் பதிகத்தை பாடுங்களேன்’’ என்று கேட்டார். தமிழ்த் தேன் நாவுக்கரசரின் நாவில் ஊறித் தளும்பியது. ‘‘பண்ணின் நேர் மொழியாளுமை பங்கரோ’’ என்று தொடங்கி ‘‘திண்ணமாகத் திறந்தருள் செய்மினே’’ என்று தொடங்கி ‘‘அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் என்று தொடங்கி ‘‘சரக்க விக்கதவந் திறப்பிம்மினே’’ என்று கேட்டபோது மட்டும் ஈசன் சட்டென்று எழுந்தான். கதவு அதிர்ந்தது. அதிலுள்ள மணிகள் தானாக ஒலித்தன. வேதாரண்யேஸ்வரரின் முன்பிருந்த அந்தப் பெருங்கதவு வானம் இரண்டாகப் பிளந்தது போன்று திறந்து கொண்டது. இதற்குப் பின்னர், ஞானசம்மந்தப் பெருமானும், அப்பரடிகளும் தரிசித்தனர்.

இப்போதெல்லாம் கோயில் என்றாலே முண்டியடித்துக் கொண்டு தரிசனம் செய்து விட வேண்டும் என்று ஒரு அவசரத்தை நாம் கைக்கொண்டிருக்கிறோம். இந்த அவசரத்தை முதலில் கைவிட வேண்டும். ‘‘முன்னால முன்னால போங்க’’ என்று தள்ளிக்கொண்டே முந்திச் செல்லும் கலாச்சாரத்தை இந்த நேரத்திலாவது கைவிட வேண்டும். ஏனெனில், ஒரு காலத்தில் கோயில்கள் அமைதிச் சாலைகளாகவும் தியான கூடங்களாகவும் திகழ்ந்திருந்தன. முக்கியமாக கருவறையின் முன்பு இறைவனை நோக்கியபடி இருக்கும் தரிசனமே முக்கியம். அங்கிருந்து பொங்கும் பிம்ப சாந்நித்தியத்தை பெற்றுக் கொள்ளும் நம் உள்ளப் பாத்திரத்தை காலியாக வைத்திருப்பதையே முக்கியமாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் பொறுமையாக நகர்ந்து அதுமட்டுமில்லாமல் நமக்குப் பின்னாலும் பக்தர்கள் காத்திருந்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நகர்ந்தபடியே வணங்கி விட்டு வாருங்கள். ‘‘நான் இவ்ளோ நாளா பார்க்கலை. கொஞ்ச நேரமாவது நிக்க விடுங்க’’ என்றெல்லாம் சந்நதியின் முன்பு பிடிவாதம் பிடிக்காதீர்கள். நகர்ந்தபடியே தரிசித்தலை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தனி மனித இடைவெளி விட்டு தரிசியுங்கள். பிரசாத ஸ்டால்களில் வாங்கியவற்றை உண்டுவிட்டு ஆங்காங்கு எறியாதீர்கள். ஆன்மிகம் எனில் கோயிலுக்குச் சென்று வணங்குவது மட்டும் கிடையாது. நடைமுறை வாழ்வில் சக மனிதர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது. பொது இடங்களில் தனிமனித சுயக் கட்டுப்பாடும், அசூயை இன்றி நடத்தலுமே ஆகும். அதனால்தான் யோக சாஸ்திரங்கள் யமம், நியமம் என்கிற அடிப்படையான அன்றாட நடைமுறைகளை வலியுறுத்துகின்றன.