சுப கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் பல யோகங்கள் உள்ளன. அவற்றில், குறிப்பிடும்படியான ஒரு சுபயோகம் என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட காலம் உங்களுக்கு நன்மை மட்டும் நடந்து கொண்டே இருந்தால் அதனை யோகம் என நாம் நம்புகிறோம். அதுபோலவே, நீண்ட காலம் உங்களுக்கு தீமைகள் நடக்காமல் இருந்தால் அதுவும் ஒருவகையான யோக அமைப்புகள்தான் என்பதை உணருங்கள். நாம் மனநிம்மதியுடன் இருப்பதும் சந்தோஷமான காலம்தான் என்பதை உணருங்கள். சுபகிரகங்கள் தரும் யோகமானது அமைதி, ஆனந்தம், வளர்ச்சி, ஞானம், அறிவு ஆகியவற்றை கொடுத்து உணர வைக்கும்.
அதி யோகத்திற்கான அமைப்புகள் ராசி கட்டத்தில், லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரனில் இருந்தோ முறையே ஆறாம் (6ம்) பாவகம், ஏழாம் (7ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகங்களில் சுப கிரகங்களான வியாழன், புதன், சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் இருப்பதை அதி யோகம் என குறிப்பிடப்படுகிறது. இவை சந்திர அதி யோகங்களில் ஒரு யோகமாகவும் சொல்லப்படுகிறது. பாவக் கிரகங்கள் பார்வை தொடர்பு ஏற்படின் இந்த யோகத்தின் அமைப்புகள் குறைவாக இருக்கும்.
அதி யோகத்தின் பலன்கள் என்ன?
* சிலருக்கு லக்னமும் / ராசியும் ஒன்றாக அமையும். அவ்வாறே, இந்த யோகத்திற்கு லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்து, மற்ற கிரகங்கள் முறையே ஆறாம் (6ம்) பாவகம், ஏழாம் (7ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகங்களில் சுப கிரகங்கள் இருந்தால் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.
* வியாழன் போன்ற சுப கிரகங்கள் 6ம் பாவகங்களில் தொடர்புகள் உண்டாக்கும் பொழுது தொப்பைகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்களுக்கு புதிய வேலைகளும் புதிய வாய்ப்புகளும் உருவாகும்.
* வீடு வாங்குவதற்கோ, வாகனங்கள் வாங்குவதற்கோ, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் எளிமையாக கடன்கள் கிடைக்கும். இவர்களை பலர் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கு கடன் தருவதற்கு இந்த நிறுவனங்கள் கொடுக்கும், சில வங்கிகள் உங்கள் போனை எப்பொழுதும் தொடர்பு கொண்டு கடன் வாங்க சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருக்கும் அமைப்புகளை உருவாக்கும்.
* இவர்களுக்கு நோய் அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. அவ்வாறு ஏற்படுமாயின் அசுப கிரகங்களின் பார்வை ஆறாம் பாவகத்தை (6ம்) பார்க்கும் நேரங்களில் சில உபாதைகள் ஏற்பட்டு விலகும். இவர்களுக்கு நோய் பற்றிய அச்சங்கள் அவ்வளவாக உண்டாகாது. அச்சமயங்களில் யாரேனும் வந்து இவர்களுக்கு உதவி செய்யும் பாக்கியத்தை பெற்றிருப்பார்கள்.
* யாருக்கு ஆறாம் பாவகம் (6ம்) சுபமாக வலிமை பெறுகிறதோ, அவர்கள் வம்புகளுக்கு அஞ்சுவார்கள். யாரையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். அதேசமயத்தில், எதிரிகளும் இவர்களுக்கு நேரிடையாக இருக்க மாட்டார்கள்.
* ஏழாம் பாவகம் (7ம்) சுபமாக அமையப் பெறுமாயின் வியாபாரம் செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். எந்த முதலீடும் இல்லாமல் ஒரு புறம் ஒரு பொருளை வாங்கி மறுபுறம் எளிமையாக விற்பனை செய்யும் திறமை பெற்ற நபர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அப்படிப்பட்ட நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்.
* இந்த யோகம் உள்ளவர்கள் உத்யோகம் மற்றும் தொழில் சிறப்பாக அமையப் பெற்றவர்களாக இருப்பார்கள். உத்யோகத்தில் மேலும் உயர்வடையும் நபர்களாக இருப்பார்கள்.
* சுபத்தன்மைகள் ஆறாம் பாவகத்துடன் (6ம்) ஏற்படும் பொழுது எதிரிகளுடன் மோதும் தன்மை ஏற்படாது. எதிரிகளுக்காக இரக்கப்படும் மனோபாவம் கொண்டவராக இருப்பார். ஆனால், இவர்கள் ஒருவரை விரோதமாக பார்த்துவிட்டால் அவர்களுக்கு பெரிய பாதிப்புகள் என்பது நிச்சயம்.
* பொருளாதாரத் தேவைகள் இவர்களுக்கு தானாகவே ஏற்பட்டு அதற்கு தேவையான விஷயங்கள் தானாகவே நடந்தேறும்.
* இவர்களுக்கு ஆறாம் (6ம்), ஏழாம் (7ம்), எட்டாம் பாவகம் (8ம்) சுபத்தன்ைமயோடு இருப்பதால் அடுத்தவர்களுடன் போட்டி போடும் எண்ணங்கள் தோன்றவே தோன்றாது. மேலும், தனது வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்ற சிந்தனையை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை பார்த்து பொறாமை கொள்ளும் அமைப்பும் இவர்களுக்கு அறவே இருக்காது.
அதி யோகத்திற்கான பரிகாரங்கள்
* சுப கிரகங்களான சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன் தொடர்பு கொள்வதால் ஏதேனும் ஒரு புதன் அல்லது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கும்பகோணம் அருகிலுள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வழிபாடு செய்தல் நலம் பயக்கும்.
* திருநெல்வேலி அருகிலுள்ள ராதாபுரத்தில் உள்ள விஜயாபதி விஸ்வாமித்ரர் கோயிலில் வழிபட வேண்டும். அருகிலுள்ள கடலில் குளித்து வர வேண்டும். பின்பு இங்குள்ள விநாயகர், மகாலிங்கம் மற்றும் அகிலாண்டேஸ்வரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும்.
* படிக்கின்ற வயதில் பிள்ளைகளுக்கு எழுதும் பொருள், படிப்பிற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவைகளைச் செய்தால், உங்களுக்கு ஏதேனும் தோஷம் இருந்தாலும் விரைவாக விட்டுச் செல்லும். முப்பெரும் தேவியரின் அருள் பெறுவீர்கள்.
