×

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கண்காட்சி

திருச்சி, செப்.29: திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோர், இயற்கை இடுபொருட்களை தயாரிப்போர் மற்றும் சந்தைப்படுத்துவோரை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஒவ்வொரு மாதமும் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெறும். முதல் நிகழ்ச்சி அக்.1ல் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கப்படும். இதில் இயற்கை வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல், சத்துமிகு காய்கறி தோட்டம், இயற்கை பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைப்பர்.

மேலும் இயற்கை இடுபொருட்களை சந்தைப்படுத்தவும், அவற்றை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கச் செய்யவும், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செய்வோர் மூலம் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களை வாங்கும் வாய்ப்பு எளிதாவதுடன், இடுபொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும். ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்போர் மற்றும் சந்தைப்படுத்துவோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.

இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0431-2962854, 91717 17832 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து ெகாள்ளலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

The post சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Sirukamani ,Agricultural Science Station ,Trichy ,Sirugamani Agricultural Science Station ,Raja Babu ,Tamil Nadu Agricultural University ,Sirukamani Agricultural Science Station Exhibition to Promote Organic Farming ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...