×

ஆவின் மாட்டுத்தீவனத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்டத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

ஈரோடு,செப்.28: ஆவின் மாட்டுத்தீவனத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்டத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் கூறினர். ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: மாவட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளதால் பாசனப்பகுதிகளில் கூட வறட்சி நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது.பாண்டியாறு மாயாறு இணைப்பு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.மெயின் வாய்க்காலில் காங்கிரிட் தளம் அமைக்கும் பணியின் போது சேதமடைந்த கொப்பு வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் கொப்பு வாய்க்கால்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீரானது காவிரி,பவானி ஆறுகளை நாசப்படுத்தி வருகின்றது. மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் பதவியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில்,தண்ணீர் குறைவாக திறக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறுதலான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு மழைக் குறைவு காரணமாக கீழ்பவானி பகுதியில் 30 சதவீத விவசாயிகள் தான் நெல் நாற்று விட்டுள்ளனர். தற்போதுள்ள அணையின் தண்ணீர் இருப்பை கணக்கில் கொண்டு முறைவைத்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நில பகுதிகளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாத நிலை இருந்து வருகின்றது. வாய்க்காலில் தண்ணீர் திருட்டு அதிகமாக நடப்பதால் இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் மழையை நம்பி இருக்கும் மானவாரி விவசாயிகள் இந்தாண்டு கடலை செடி பயிரிட்டனர். ஆனால் போதிய மழை இல்லாததால் கடலை செடிகள் காய்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டள்ளது.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். வன உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது.  மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையாக தடைவிதிக்க வேண்டும். மலைக்கிராமங்களில் 100 நாள் திட்டப்பணியாளர்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும்.மலைக்கிராமங்களில் உள்ள பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும். பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்திருப்பது வரவேற்க கூடியதாகும். இதே பால கால்நடைத்துறை சார்பில் அதிவேக ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்க கூடியாதாகும்.

கொப்பு வாய்க்கால்கள் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும். கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் கறவை மாடுகளுக்காக ஆவின் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மாட்டு தீவனம் கிடைப்பதில்லை. இதனால் பால் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆவின் நிறுவனம் சார்பில் மாட்டுத்தீவன உற்பத்தியை தொடங்க வேண்டும். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் லிட்டர் ஒன்றுக்கான ஊக்கத்தொகை ரூ.3 கடந்த சில நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மேட்டூர் மேற்குகரை பாசன பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லாமல் உள்ளதால் விவசாயிகள் நாற்று நடவு செய்ய முடியாத நிலை உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் பற்றாக்குறை என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது போல தெரிகின்றது.எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய கவனம் செலுத்த வேண்டும். கீழ்பவானி கசிவு நீர் திட்டங்கள் இந்தாண்டு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினர்.

The post ஆவின் மாட்டுத்தீவனத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்டத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Collector ,Collector ,Rajagopal ,Dinakaran ,
× RELATED மது விற்ற 3 பேர் கைது