புல்வாமா தாக்குதல் குற்றவாளி மாரடைப்பால் மரணம்

ஜம்மு: 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மாரடைப்பால் காலமானார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெத்போரா என்ற இடத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோத செய்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். 8 பேர் பலத்த காயமடைந்தனர்.  இந்த வழக்கில் புல்வாமா மாவட்டம் காகபோராவின் ஹாஜிபால் கிராமத்தை சேர்ந்த பிலால் அகமது குச்சே உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் உள்பட ஆறு தீவிரவாதிகள் தனித்தனியே நடந்த என்கவுன்டர்களில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கிஷ்த்வார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த குச்சே கடந்த 17ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.

The post புல்வாமா தாக்குதல் குற்றவாளி மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: