பங்குச்சந்தையில் ரூ1.8 லட்சம் கோடி இழந்த சிறு முதலீட்டாளர்கள் பணத்தில் லாபம் பார்த்தவர்கள் யார் யார்?… ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும், கடந்த 3 ஆண்டில் சிறு பங்குமுதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ரூ1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இதை வைத்து பெரு நிறுவனங்கள் சில லாபம் பார்த்துள்ளன. அவ்வாறு லாபம் பார்த்தவர்கள் யார் யார் என்ற பட்டியலை செபி பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய பங்கு பரிவர்த்னை வாரியம் (செபி) சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், ‘‘கடந்த 2023-24 நிதியாண்டில் பங்குச்சந்தையில் எப் அண்ட் ஓ ஊக வணிகத்தில் முதலீடு செய்த 73 லட்சம் சிறு முதலீட்டாளர்கள், அதாவது 91 சதவீதம் பேர், பணத்தை இழந்துள்ளனர்.

அதாவது, ஒருவருக்கு தலா ரூ1.2 லட்சம் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 நிதியாண்டுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை பங்கு முதலீட்டாளர்கள் தலா ரூ2 லட்சம் வீதம் இழந்துள்ளனர். இதன்படி இந்த வர்த்தகத்தில் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு ரூ1.8 லட்சம் கோடி’’ என தெரிவித்துள்ளது. பொதுவாக ஊக வணிகத்தில், பணம் இழப்பு மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஒரு ஒப்பந்தம் (ஆப்ஷன்) வாங்கும்போது அதன் எதிர்கால விலையை சரியாக ஊகிப்பவர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். இவ்வாறு ஊகிக்க முடிந்த பெரிய நிறுவனங்கள், பெரும் புள்ளிகள் சிலர் லாபம் அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பங்குகளின் விலையை முன்பே ஊகித்து செய்யப்படும் எப் அண்ட் ஓ வணிகம் கடந்த 5 ஆண்டுகளில் 45 மடங்கிற்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் இந்த வணிகத்தில் ஈடுபட்ட 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். ஆனால் இவர்களின் முதலீட்டால் லாபம் பார்த்த பெரும் புள்ளிகளின் பெயர்களை செபி பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

The post பங்குச்சந்தையில் ரூ1.8 லட்சம் கோடி இழந்த சிறு முதலீட்டாளர்கள் பணத்தில் லாபம் பார்த்தவர்கள் யார் யார்?… ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: