2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, 2 மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி மொத்தம் 8 கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 900க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில், இங்கெல்லாம் சேகரமாகக்கூடிய குப்பைகளை சேகரிக்க காஞ்சிபுரம் மாநகராட்சியில் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தூய்மை பணியாரகள், ஒப்பந்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் முதலே தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் வீதிக்கு வந்து போராடுவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில், தற்போது ஒப்பந்தாரர்களின் அந்த ஒப்பந்த காலமானது கடந்த மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதத்திற்கான சம்பளம் பணம் மற்றும் இன்னும் 7நாட்களில் இம்மாதம் முடிவடையவுள்ள நிலையில் இம்மாதத்திற்கான சம்பளம் என 2 மாதம் சம்பளம் நிலுவையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் தொடர்ந்து தூய்மை பணியாளர் தெரிவித்தும் கூட காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நேற்று பணிகளை புறக்கணித்து 4 மற்றும் 5வது கோட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணா அரங்க நுழைவு வாயிலில் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகராட்சி சுகாதார நகர்நல அலுவலர் அறிவுடை நம்பி மற்றும் அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தூய்மை பணியாளர்கள் துர்நாற்றத்தில் கஷ்டபடக்கூடிய எங்களின் வாழ்வாதாரத்திற்காக பணிபுரியும் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது கொடுக்கக்கூடிய 10 ஆயிரம் சொற்ப சம்பளத்தைகூட வழங்காது இன்று, நாளை என அலைக்கழிப்பது நியாயம் தானா எங்களுக்கு சம்பளம் வரவில்லை. இதனால், வீட்டின் வாடகை கூட கட்ட முடியாமல் ஒருவேளை உண்டும் மற்றொரு வேலை உண்ணாமலும் கூட பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

மாநகராட்சி ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து பணிக்கு திரும்ப அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப மறுத்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் இரண்டு கோட்டங்கள் சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பணிகளை முடித்துவிட்டு வந்த மீதமுள்ள ஆறு கூட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும், ஒன்றுகூடி நீண்டநேரம் காத்திருந்து மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியாததால் திடீரென சுமார் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நெல்லுக்கார தெரு பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி அதிகாரிகள் இன்றைக்குள் ஒருமாத சம்பள நிலுவை தொகையினை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன்பெயரில், அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், இன்றைக்குள் சம்பளம் வழங்கப்படாவிடில் நாளை முதல் ஒட்டுமொத்தமாக அனைத்து கூட்டங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒட்டுமொத்தமாக முடிவெடுத்திருக்கின்றனர்.

The post 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: