நன்றி குங்குமம் தோழி
விஜி ஷாரன்
‘‘அம்மாவின் சமைய லுக்கு ஈடு இணை கிடையாது. எனக்கு மட்டுமில்லை உலகத்தில் உள்ள அனைவருக்கும் அம்மாவின் சமையல் என்றால் தனி ருசின்னு சொல்வாங்க. அதற்கு முக்கிய காரணம், சமையலில் மசாலா பொருட்களுடன் கொஞ்சம் அன்பையும் சேர்த்து சமைப்பதுதான். அதனால்தான் நான் என்னுடைய ‘சமையல் வித் ஷாரன்’ சேனலில் ‘காதலோடு சமைத்தால் சுமாரான சமையலும் சூப்பரா இருக்கும்’னு சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
இப்போது அதுவே என் ஹாஷ்டேக்காக மாறிவிட்டது’’ என்கிறார் ஃபுட் விலாகரான சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜி ஷாரன். இவரின் ஸ்பெஷாலிட்டியே தென்னிந்திய உணவுகளை, வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு எளிதாக சமைப்பதுதான். குறிப்பாக பேச்சிலர்களுக்கு இவரின் சமையல் ஒரு வரப்பிரசாதம். கடந்த நான்கு வருடமாக தன் வலைப்பக்கத்தில் பல்வேறு தென்னிந்திய உணவுகளை வழங்கி வருகிறார்.
‘‘நாலு வருஷம் முன்புதான் இதை செய்ய ஆரம்பித்தேன். எனக்கு சாப்பிட பிடிக்கும். அதனால் கோவிட் காலத்தில் வீட்டில் வகை வகையா சமையல் செய்ய துவங்கினேன். அப்படி சமைக்கும் உணவினை படம் பிடித்து பதிவு செய்தேன். ஒரு உணவினை பார்க்கும் போதே அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வேண்டும். நான் பதிவு செய்யும் உணவும் அப்படி இருப்பதால், அதற்கான ரெசிபிகளை பதிவு செய்ய சொல்லி கேட்டார்கள். நானும் கிச்சனில் சமைக்கும் உணவுகளை வீடியோவாக பதிவு செய்தேன்.
அந்த சமயத்தில் என் வாழ்க்கை மண் சரிவு ேபால் சரிந்து போகும்னு நினைக்கல. கோவிட் இரண்டாவது அலையில் என் அம்மா மற்றும் அண்ணன் இருவரையும் இழந்தேன். அந்த இழப்பு மனதளவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. டிப்ரெஷனுக்கு தள்ளப்பட்டேன். எனக்கான உலகம் ஸ்தம்பித்து விட்டது போல் உணர்ந்தேன். அவங்க இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியல. கிட்டத்தட்ட எட்டு மாசம் என் மனசு இருளில் புதைந்து இருந்தது.
அப்பா, என் கணவர் எல்லோரும் பயந்துட்டாங்க. குழந்தைகளை கூட கவனிக்கல. என்னை அதில் இருந்து மீட்க நினைச்சாங்க. மீண்டும் சமையலை பதிவிட செய்ய சொன்னாங்க. ஆரம்பத்தில் என் மனம் அதில் ஈடுபடவே இல்லை. அவங்கள நினைக்கும் ேபாது எல்லாம் உடைந்திடுவேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவும் கணவரும் என் மனநிலையை மாற்றினாங்க. எட்டு மாசம் கழித்து நான் மீண்டும் பதிவுகளை வெளியிட்ட போது, என்னை பின்பற்றி வந்தவர்கள் அனைவரும் ஆதரவு அளித்தாங்க. அவர்களின் சப்போர்ட் என்னை டிப்ரஷனில் இருந்து மீட்டு, தன்னம்பிக்கையை கொடுத்தது.
இப்போது ஐந்து மாதம் முன்பு சொந்தமா ஸ்டுடியோ திறந்தேன். அதில்தான் சமையல் வீடியோக்களை ஷூட் செய்றேன். பார்வையாளர்கள் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க. அதுவே எனக்குள் பெரிய மோடிவேஷனைக் கொடுத்தது. தற்போது இதுவே என்னுடைய அன்றாட வேலையாக மாறிவிட்டது. தினமும் கண்டிப்பா ஒரு ரெசிபியினை அப்லோட் செய்திடுவேன். மேலும் கல்லூரிகளுக்கு சிறப்பு விரிவுரையாளராகவும் சென்று வருகிறேன்’’ என்றார்.
‘‘முதுகலை மற்றும் எம்.பில் முடிச்ச பிறகு திருமணம் வரை நான் படித்த கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தேன். என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை என்பதால் குழந்தைகள், குடும்பம் என்று வந்த பிறகு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேலையை ராஜினாமா செய்தேன். வீட்டில் இருக்கும் போது பேக்கிங் பயிற்சியும் எடுத்தேன். குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும், எனக்கான நேரம் நிறைய இருப்பதாக உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் நான் கற்றுக் கொண்ட பேக்கிங் குறித்த வீடியோக்களை பதிவு செய்தேன். கோவிட் பிறகு அதுவே என் முக்கிய வேலையாக மாறியது. ஆரம்பத்தில் நானே சமைத்து, வீடியோ எடுத்து, பின்னணி குரல் கொடுத்து, எடிட் செய்வேன். கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் அதிகரிக்க, புது புது உணவுகளை பதிவு செய்தேன். காரணம், என்னுடைய உணவுகள் வித்தியாசமா இருக்கணும் அவ்வளவு தான். சுடச்சுட ஆவி பறக்கும் உணவினை வாழை இலையில் ேபாட்டு அதை கையில் எடுத்து காண்பிக்கும் போது கண்டிப்பாக அனைவரின் நாக்கும் ஊறும்.
அதுதான் என் சக்சஸாக மாறியது. அந்த வரிசையில் ஆரம்பித்ததுதான் பேச்சிலர்களுக்கான ரெசிபி. ‘எலேய்… பேச்சிலர்ஸ்’னு நான் சொல்லும் அந்த ஒரு வார்த்தையே உலகம் முழுக்க உள்ள பேச்சிலர்களை ஈர்த்துள்ளது. வீட்டுச் சாப்பாட்டிற்காக ஏங்கும் இவர்களுக்கு சிம்பிளா கொடுக்கும் போது, அவர்களால் எளிதில் சமைக்க முடியும். அலுவலகம் செல்லும் பெண்களின் ஆரோக்கியத்தின் நலனுக்காக பலவித பொடி வகைகளை அறிமுகம் செய்தேன். என்னுடைய ஒரு நிமிட சட்னியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. எளிய ரெசிபிக்கள் என்பதால், சமைக்க விரும்பாதவர்களையும் சமைக்க வைத்துள்ளது’’ என்றவர், பலர் தான் செய்யும் இந்த வேலையை கிண்டல் செய்வதாகவும் கூறினார்.
‘‘வீடியோ முன்பு சமைக்கிறேன். அதற்கு எனக்கு நிறுவனங்கள் ஊக்கத்தொகை தராங்க. பொழுபோக்காக ஆரம்பித்தேன். ஆனால் இன்று என் முழு நேர வேலையாக மாறிவிட்டது. காசுக்காக சமையல் வீடியோ போடுற. நீ சமையல்காரி தானேன்னு என் காது பட கிண்டல் செய்தாங்க. என் உழைப்பிற்கான ஊதியம் அது. கரண்டியை எடுத்தோம்… அடுப்பில் வைத்து கிண்டினோம் என்பதல்ல. ஒவ்வொரு நாளும் புதுசா ரசிக்கும் படி கொடுக்கணும்.
பார்வையாளர்கள் வீட்டிலும் செய்து பார்க்கணும். என்னுடைய ஒவ்வொரு ரெசிபிக்கு பின் இவ்வளவு உழைப்பு இருக்கு. அந்த உழைப்புக்கான ஊதியம் பெறுவதில் என்ன தவறு? நேர்மையா உழைக்கிறேன். சிலர் என் வீடியோ பதிவில் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி கமென்ட் செய்றாங்க. அதைப் பார்த்து என் அப்பா இப்படி நீ சமைக்கணுமான்னு கேட்டார்.
காரணம் என் அண்ணனுக்கு பிறகு அவர் இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ள எனக்கான பிசினஸ் இருக்கு. அதை எல்லாம் மீறி தான் நான் இதை செய்கிறேன். காரணம், இது எனக்கு விருப்பமான தொழில். அதில் நான் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த நினைத்தேன்… செய்திட்டேன். எனக்கு பெரிய பிளான் எல்லாம் கிடையாது. செய்யும் வேலையை உண்மையா செய்தா கண்டிப்பா பலன் கிடைக்கும்.
அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நாம ஓடுறதே ஒரு வேளை சாப்பாட்டுக்காக. அதே சாப்பாடு மூலம்தான் மக்களின் மனதில் இடம் பிடித்து இருக்கேன். கோபத்தை தணிக்கும், மனநிலையை மாற்றும் சக்தி உணவுக்கு உள்ளது. இதற்கு விருது எல்லாம் நான் எதிர்பார்க்கல. என் வேலைக்கு சின்னதா ஒரு பாராட்டு கிடைச்சாலே சந்தோஷம் தான்’’ என்றவர், தென்னிந்திய உணவுகளை மட்டுமே பதிவு செய்யும் காரணத்தை விளக்கினார்.
‘‘எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்களின் உணவினை சுவைத்தாலும், நம்மூருக்கு வந்து சுடச்சுடச் சோறு, ரசம், உருளைக்கிழங்கு ஃபிரை, முட்டை ஆம்லெட் சாப்பிட்டால் அதில் கிடைக்கும் அந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நம் நாட்டு மக்கள் பல ஊர்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு கிடைக்காது. அதை அவர்கள் எளிதில் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் தென்னிந்திய உணவினை மட்டுமே பதிவு செய்கிறேன். மக்களின் விருப்பம் என்னவென்று தெரிந்துவிட்டது. அவர்களுக்கு நாலு மசாலா போட்டால் கிரேவி வரணும். அதைத்தான் நான் இன்றைய டிரெண்டிக்கிற்கு ஏற்ப செய்து தருகிறேன்.
பெண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். வேலையோ அல்லது சுய தொழிலோ எதுவாக இருந்தாலும் அதற்கான முயற்சி எடுங்க. தையல் தெரியுமா அதைகூட நீங்க ஆன்லைனில் சொல்லித் தரலாம். இப்போது சமூக வலைத்தளத்தில் நிறைய வாய்ப்பு இருக்கு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றிக்கனியை கண்டிப்பாக பறிக்கலாம். நான் இந்த துறைக்கு வந்த போது பல ஜாம்பவான்கள் இருந்தாங்க.
அதில் நீச்சலடிச்சு எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். பெண்கள் கண்டிப்பா சுயமா சம்பாதிக்கணும். இந்த ஸ்டுடியோ அமைக்க என் கணவர் மற்றும் அப்பா உதவி செய்தாங்க. அதை நான் இப்ப திருப்பி செய்கிறேன். ‘சமையல் வித் ஷாரன்’ சேனல் என் அம்மா. அவங்களுக்கு நான் இதில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தணும்னு விருப்பம். இப்ப அவங்க இல்லை. ஆனால் அவங்க ஆசீர்வாதத்தில் நான் இதை சக்சஸ்ஃபுல்லா செய்து வருகிறேன்’’ என்றார் விஜி ஷாரன்.
தொகுப்பு: ஷம்ரிதி
The post ஸ்டவ்வோட சமைக்கும் போது கொஞ்சம் லவ்வோட சமைக்கணும்! appeared first on Dinakaran.