தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம். ஆரம்பத்தில் ஒரு தொழிலை துவங்கும் போது வரும் ஏளன சொற்கள், அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சிறப்பாக நடத்தி காண்பிக்கும் போது அவை முற்றிலுமாக மறைந்து பாராட்டுகள் குவியும். அதுவரை பொறுமையாக இதையெல்லாம் கடந்து சாதிக்க வேண்டும்’’ என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த வைரப்பிரியா ராமநாதன். இவர் ‘டைமண்ட் நேச்சுரல்ஸ்’ என்ற பெயரில் அழகுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

நொதித்தல் என்ற முறைப்படி இவர் தயாரிக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் அவரது வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலம். ஒருமுறை இவரது தயாரிப்புகளை வாங்கியவர்கள் திரும்பத் திரும்ப இவரை நாடி வரும் வகையில் அதன் தரத்தில் எந்தவித காம்பிரமைசும் செய்வதில்லை. இவரது காஸ்மெடிக்ஸ் பொருட்கள், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் இவர் செய்து வரும் சமூகம் சார்ந்த தொண்டுகள் குறித்து மனம் திறந்தார்.

‘‘நான் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவள். கணவரின் பணி காரணமாக திருமணத்திற்குப் பிறகு சிறிது வருடங்கள் சிங்கப்பூரில் வசித்து வந்தேன். முதுநிலை பட்டதாரியான நான் சிங்கப்பூரில் அழகுக்கலை குறித்த முறையான பயிற்சி படிப்புகளை முடித்தேன். பிறகு குழந்தைகளின் படிப்பு காரணங்களுக்காக திரும்பவும் திருநெல்வேலி வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது நான் கற்றுக்கொண்ட பயிற்சிகளை கொண்டு எனது வீட்டிற்காக சோப்பு, ஷாம்பு, பேஸ்வாஷ் போன்ற பொருட்களை தயாரித்து அதனை நானே பயன்படுத்தி வந்தேன்.

முதல் இரண்டு வருடங்கள் வரை நான் தயாரித்த பொருட்களை நானேதான் பயன்படுத்தி வந்தேன். அதைப் பார்த்து என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்டதால், அவர்களுக்கு தயாரித்து கொடுக்க ஆரம்பித்தேன். அது அவர்களுக்கு பிடித்துப் போகவே அவர்கள் மட்டுமில்லாமல், அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அதனை பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள். ஆர்டர்கள் அதிகமானதால், இதையே ஏன் பிசினசாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என்னுடைய தயாரிப்பு பொருட்களை டைமண்ட் நேச்சுரல்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய காஸ்மெடிக் பொருட்கள் அனைத்தையும் நொதித்தல் முறையில் தயாரிப்பதால் மற்ற சோப்பு, ஷாம்புகளை விட தரமாக இருக்கும். தற்போது 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் என்னிடம் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் பலனடைந்து வருகிறார்கள்’’ என்றவர், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன் பொருட்களை கஸ்டமைஸ் செய்தும் விற்பனை செய்கிறார். ‘‘ஆரம்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் என்று துவங்கி தற்போது இணையதளம் மூலமாகவும் என்னுடைய பிசினஸ் விரிவடைந்துள்ளது. அதன் வழியாக பலர் ஆர்டர் செய்கிறார்கள். மேலும் நான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கண்காட்சிகளிலும் ஸ்டால் அமைத்து அதன் மூலமாகவும் என்னுடைய வாடிக்கையாளர்களின் வட்டத்தினை அதிகரித்து வருகிறேன். ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர்களை எடுப்பதால் திருநெல்வேலி, சென்னை மட்டுமில்லாமல், சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலும் எனக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பொதுவாக கோல்ட் பிரஸ் முறையில் சோப்பு, பேஸ்வாஷ் மற்றும் ஷாம்புகளை தயாரிப்பது வழக்கம். நான் என்னுடைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதனை அறுபது நாட்கள் நொதிக்க வைக்கிறேன். இதன் மூலம் அந்தப் பொருட்களில் உள்ள அனைத்து சத்துக்களையும் முழுமையாக எக்ஸ்ட்ராக்ட் செய்ய முடிகிறது. இப்படி தயாரிக்கும் முறைக்கு நொதித்தல் என்று பெயர். உதாரணமாக ரோஸ் சோப்புகளுக்காக ரோஜா இதழ்களை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து அறுபது நாட்களுக்கு காற்று புகாத பாட்டிலில் வைத்திடுவோம்.

அது நொதி நிலையை அடைந்து, அதன் சாற்றினை சோப்புகள் மற்றும் ஷாம்புகள் தயாரிக்க பயன்படுத்துகிறோம். தமிழகத்தில் நொதித்தல் முறையில் தயாரிப்பது நாங்கள் மட்டுமே என நினைக்கிறேன். சிங்கப்பூரில் நான் வசித்த போது இதற்காக முறையாக பயிற்சி பெற்றிருக்கிறேன். அந்த பயிற்சிதான் எனக்கு கைக்கொடுக்கிறது’’ என்றவர் தன்னுடைய தயாரிப்புகள் குறித்து பட்டியலிட்டார்.

‘‘தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்புக்கான பல்வேறு பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதே போன்று பிறந்த குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தயாரிப்புகளும் உள்ளது. இதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நொதித்தல் முறையில் 14 வகையான சோப்புகளை தயாரிக்கிறேன். குழந்தைகளுக்கான பொருட்கள் அனைத்தும் தரப் பரிசோதனை சான்றிதழ் பெற்றவை. இதனை தவிர வீட்டிற்குத் தேவையான மசாலாப் பொருட்கள், வத்தல், வடகம், ஸ்நாக்ஸ் வகை உணவுகளையும் தயாரிக்கிறோம். இந்தப் பொருட்களை விற்பனை செய்ய எங்களது மகளிர் குழு மிகுந்த உதவியினை செய்து வருகிறது’’ என்றவர் சமூக சேவையில் ஆர்வம் ஏற்பட்ட காரணத்தை விவரித்தார்.

‘‘எனக்கு இயல்பிலேயே சமூக சேவை செய்வதில் தனிப்பட்ட ஆர்வம் அதிகமாக இருந்தது. எங்களது வருமானத்தில் 30% சமூக சேவைகளுக்காக ஒதுக்கி வைத்திடுவோம். அதன் மூலம் ஆதரவற்ற இல்லங்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது, பிறந்த குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் டயாப்பர்கள் கொடுப்பது, உணவு தயாரித்து இல்லங்களுக்கு வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறோம். மேலும் சில பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறந்திருப்பார்கள். அவர்களுக்கு தாய்ப்பாலினை சேகரித்து வழங்கி வருகிறோம். இதன் தேவைகளை நாங்கள் உணர்ந்தது போல் மற்றவர்களும் உணர ஒரு விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த நினைக்கிறோம்.

ஒன்றிரண்டு பொருட்களுடன்தான் நான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன். தற்போது 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இது என்னுடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று ெசால்லலாம். மேலும் நிறைய புதிய பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இது குறித்த பயிற்சியும் பெண்களுக்கு அளிக்க வேண்டும். தற்போது அனைத்தும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறேன்.

அதனால் சொந்தமாக கடை அமைக்க வேண்டும். இப்படி நிறைய திட்டங்கள் உள்ளது. அதற்கான பணியினை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறேன். விரைவில் இவை அனைத்தும் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆர்வம் மற்றும் தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்’’ என்கிறார் பெண் தொழில்முனைவோர் வைரப்பிரியா.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்! appeared first on Dinakaran.

Related Stories: