வெயில் காலத்தில் வீட்டை குளுமையாக வைத்திருக்கும் மண் வீடுகள்!

நன்றி குங்குமம் தோழி

மண் வீடுகள் தற்போது பிரபலமாகி வருகிறது. எவ்வளவுதான் வெயில் அடித்தாலும் மண் வீட்டிற்குள் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். அதே போல மழைக்காலங்களில் வெப்பத்தை உணர முடியும். இந்த மாதிரியான சூழல் வீட்டிற்குள் இருப்பதாலேயே பலரும் தற்போது மண் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மண்ணிலான வீடுகள் நம் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை. இந்த வீடுகளுக்கு சிமென்ட், ஜெல்லி, கம்பி போன்ற கட்டுமான பொருட்கள் அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மிகவும் குறைந்த செலவில் கட்டி முடித்து விடலாம். நம் முன்னோர்களால் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு வந்த இந்த வீடுகளை தற்போது உள்ள தொழில்நுட்பங்களை வைத்து நுட்பமாக வடிவமைத்து கட்டி வருகிறார் அகரம் ஆர்கிடெக் நிறுவனத்தின் கட்டடக் கலைஞரான மைக்கேல்.

‘‘எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம். நான் படிச்சதெல்லாமே அங்கதான். படிப்பு முடிச்சதும் கேரளாவில் உள்ள கட்டடக் கலைஞர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். கேரளாவில் மண்ணினை பயன்படுத்திதான் அதிகமாக வீடுகளை கட்டி இருந்தாங்க. அங்கதான் நான் மண்ணில் வீடு கட்டும் முறைகளை பற்றி தெரிந்து கொண்டேன். மண்ணில் வீடுகள் கட்டினாலும் அதில் சில நுட்பங்களை பயன்படுத்தினால்தான் பல காலம் வரை வீடு நிலைத்திருக்கும். அந்த முறையில் சிமென்ட் பயன்படுத்தாமல் மண்ணை கொண்டு வீட்டினை கட்டிவிடலாம்.

கான்கிரீட்டில் சிமென்ட்தான் முக்கியமான பொருள். சிமென்ட் ஒரு ரசாயனக் கலவை. அது சில காலங்களிலே தன்னுடைய உறுதியினை இழக்கும் என்பதால் சிமென்டிற்கு பதிலாக மண்ணுடன் சுண்ணாம்பு கலந்து வீடுகளை இங்கு கட்டுகிறார்கள். சுண்ணாம்பில் கால்சியம் கார்பனேட் அதிகமாக இருக்கும். கட்டியாக இருக்கும் சுண்ணாம்பினை உடைத்து பொடியாக்கி தாஜ் கட்டுமானத்திற்கும், சுவர்களில் பூச்சு வேலைகளுக்கும் பயன்படுத்துவார்கள்.

சுண்ணாம்பினை பொடியாக்கினாலும், மீண்டும் காற்றினை உள்ளிழுத்து மறுபடியும் கெட்டியாக மாறிடும். மேலும் ஆண்டுகள் பல ஆனாலும், சுண்ணாம்பு இறுகிக் கொண்டேதான் இருக்கும். அதனால்தான் அதனை மண்ணுடன் கலந்து செங்கல் மேல் பூசும் போது அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு உறுதியாகும். சுண்ணாம்பு பயன்படுத்தி வீடுகள் கட்டுவது அல்லது வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசுவது எல்லாம் சுவரின் உறுதித் தன்மையை பாதுகாப்பதற்காகத் தான்’’ என்றவர், மண் வீடுகள் மற்றும் அதில் செய்யக்கூடிய வேலைப்பாடுகள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘ஒரு வீட்டை கட்டுவதற்கு மண், சுண்ணாம்பு மற்றும் செங்கல் இருந்தால் போதுமானது. மண்ணிலேயும் பல அடுக்குகள் இருக்கிறது. மேல்புற மண், அதாவது, முதல் ஒரு அடிக்கு மிகவும் வளமான மண். இதில் ஆர்கானிக் சத்து அதிகமாக இருக்கும். நாம் அதனை வீடு கட்டுவதற்கு பதிலாக தோட்டத்திற்கு பயன்படுத்துவதால், கட்டுமானத்திற்கு பயன்படுத்த மாட்டோம். அடுத்து களிமண். மண்ணில் உள்ள களிமண்ணின் கலவையை பொறுத்து அதனை பயன்படுத்தி வீடு கட்ட முடியுமா? முடியாதா என்று முடிவு செய்ய முடியும். களிமண் போதுமானதாக இல்லையென்றால் அதனுடன் வேறு பொருட்களை கலக்க வேண்டும்.

மண் வீட்டை பொறுத்த வரை சுவர்கள்தான் இந்த வீட்டை தாங்கி நிற்க வைக்க உதவுகிறது. எந்தளவிற்கு சுவர்களை உறுதித் தன்மையோடு கட்டுகிறோமோ அந்த அளவிற்கு வீடு உறுதியாக இருக்கும். மேலும் அடுக்குமாடி கட்டவும் முடியும். சுவர்களை உயரமாகவும் அடர்த்தியாகவும் கட்டும் போதுதான், அதனுடைய தாங்கும் திறன் அதிகரிக்கும். உயரமான சுவர்களில்
வில் வடிவத்தில் படிக்கட்டுகளை அமைக்கும் போது, உயரமான இடத்திற்கு ஏறிய உணர்வு இருக்காது.

வீட்டிற்குள் படிகள் அமைக்க லாரியின் பட்டானினை படிகளாக அமைத்திருக்கிறோம். சைக்கிள் சக்கரங்களை வைத்து ஒரு மாடல் செய்திருக்கிறோம். இவையெல்லாமே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் என்பதால், அதை கொண்டே வீட்டின் உட்புறங்களை வடிவமைக்கலாம். வீட்டின் மேற்கூரை ‘வால் டோம்’ முறையில் வட்ட வடிவமாக கட்டினால், பார்க்க அழகாக இருக்கும். செங்கல் படுக்கை, ஆன்சைட் தரைகள் அமைக்கலாம். தேவை ஏற்பட்டால் மண்ணுடன் சிமென்ட் கலந்து பயன்படுத்தலாம்.

வேலூர் வெப்பமான பகுதி என்பதால், அந்த வெப்பத்தினை வீட்டில் இருக்கும் போது உணராமல் இருக்க வேண்டும் என்று ஒரு வீட்டினர் எங்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். ரெம்ட் எர்த் முறையினை சுவர்களை கட்ட பயன்படுத்தினோம். செங்கல், செம்மண், கொஞ்சம் சிமென்டை சேர்த்து காய வைப்பதுதான் ரெம்ட் எர்த் முறை. இது ஒரே மாதிரியாக இருப்பதால் சுவர்கள் பார்க்க அழகாக இருக்கும். அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அடுத்து இரண்டு செங்கல்லை இடைவெளி விட்டு வைத்து கட்டும் முறை. இதில் சிறிய துளைகள் இருப்பதால் வீட்டிற்கு வெளியே வெப்பமாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருந்தால் அது முழுவதுமாக உள்ளே வராது. வெஞ்ஞரி விளைவு என்ற ஒரு கோட்பாடு இருக்கிறது. காற்று எவ்வளவு சூடாக இருந்தாலும், அது சிறிய ஓட்டைகள் வழியாக செல்லும் போது குளிர்ச்சியாக மாறும். அதனால் தான் ஜன்னல்கள் அல்லது சுவர்களில் பூ வடிவ துளைகளை வைத்து கட்டும்போது அதிலிருந்து வரும் காற்று குளிர்ச்சியாக வரும். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டின் காம்பவுண்ட் சுவர்களை கட்டினோம். வீட்டிற்குள் வரும் காற்று வெளியேற இடம் கிடைத்தாலே வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்கலாம், நேரடியாக சூரிய ஒளியை தவிர்க்க கொடிகளாக பரவும் தாவரங்களை தொங்கவிடலாம். இதனால் நேரடியாக சூரிய ஒளி வீட்டிற்குள் வராது. இது போன்ற செயல்களை பயன்படுத்திதான் மண் வீடுகளை அமைக்கிறோம். மண் வீடுகளை முறையாக பராமரித்தால் காலத்திற்கும் அந்த வீடு உறுதியாக இருக்கும். மண் என்பதே கரையக்கூடியது என்பதால், தண்ணீர் அதிகமாக தேங்கினாலோ அல்லது அதிகமாக பட்டாலோ கரைய வாய்ப்புள்ளது.

அதனை பாதுகாக்க ஓடுகளை பதித்து மழை வந்தாலும் அது வீட்டை பாதிக்காமல் அமைத்திருக்கிறோம். சில இடங்களில் தண்ணீர் தேங்கும். அங்கு கருங்கல்லை ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தி பிறகு செங்கல்லை வைத்து கட்டலாம். வாட்டர் ஃப்ரூப் கோட்டிங்கும் உபயோகப்படுத்தலாம். மண் வீடுகளை முறையாக பராமரித்து வந்தால், பல ஆண்டுகள் இவை உறுதியாக நிலைத்திருக்கும்’’ என்கிறார் மைக்கேல்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post வெயில் காலத்தில் வீட்டை குளுமையாக வைத்திருக்கும் மண் வீடுகள்! appeared first on Dinakaran.

Related Stories: