பிரிஷாவுக்குள் இருப்பது சூப்பர் பவர்!

நன்றி குங்குமம் தோழி

உள்ளுணர்வு எனும் இன்டியூட்டி பவர் எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒன்றுதான். ஆனால் அது செயல்படும் சதவிகிதம்தான் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். பிரிஷாவுக்கு இது 100% வேலை செய்கிறது என, சூப்பர் பவர் சிறுமி பிரிஷா குறித்து அறிமுகப்படுத்தி பேச ஆரம்பித்தவர் அவரின் அம்மாவான வழக்கறிஞர் தேவிப்பிரியா.

‘‘101 வேர்ல்டு ரெக்கார்ட்… 200 கோல்டு மெடல்… சிறுமியாக 7 வயதிலேயே முதல் வேர்ல்டு ரெக்கார்ட் என பிரிஷாவின் சாகசங்கள் மிகமிக அதிகம்.உலகத்திலே பிரிஷாதான் மிகச் சிறிய வயதில் அதிகமான வேர்ல்டு ரெக்கார்டுகளைச் செய்து இருக்கிறார்’’ என்றவர், ‘‘கண்ணைக் கட்டி தண்ணீருக்கு அடியில் வேகமாக ரூபிக்ஸ் க்யூப் சேர்ப்பது, கண்ணைக் கட்டி வேகமாய் கணக்குப் போடுவது, கண்களைக் கட்டி கெமிஸ்ட்ரி பார்முலாவை எழுதுவது, கண்ணைக் கட்டி இரண்டு கைகளில் திருக்குறள் எழுதுவது, கண்களைக் கட்டி திரையில் தெரிவதை அப்படியே சொல்வது, பார்வை சவால் இருக்கிற சிறுவனை யோகா செய்ய வைத்து வேர்ல்டு ரெக்கார்டை பிரேக் செய்தது, சைக்கிளிங்கில் ஹூலா ஹுப்ஸ், ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைச் செய்வது, மிக இளம் வயதில் புத்தகம் எழுதி வெளியிட்டது என பிரிஷாவின் நூறு வேர்ல்டு ரெக்கார்டும் வெவ்வேறு துறையில்’’ என விரல் உயர்த்தியவர், ‘‘வீட்ல கரன்ட் இல்லைனா ஜாலியா அலையிற ஒரே ஆள் பிரிஷாதான்’’ எனப் புன்னகைக்கிறார்.

‘‘கூடவே டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், கராத்தே, ஷூட்டிங், ஸ்கேட்டிங் என பிரிஷா ஆர்வம் காட்டாத விளையாட்டுகளே இல்லை. எல்லாவற்றிலும் அவள் முதல் இடம்தான். அதேபோல் கீ போர்டு, கிட்டார், டிரெம்ஸ், பாடுவது என இசைத் துறையிலும் இருக்கிறார். இதுவரை பிரிஷா வாங்காத டைட்டிலே இல்லை எனலாம்…

* வேர்ல்டு எங்கஸ்ட் யோகா டீச்சர் ஃபார் பிளைன்ட் என என்சிபிசி சான்றிதழ்…
* துபாய் நாட்டின் குளோபல் சைல்ட் ஸ்டார்ஜி விருது…
* மலேசிய நாட்டின் லிட்டில் யோகா சைல்ட் விருது…
* ஆயுஸ் வழங்கிய யோகா ஆச்சாரியா விருது…
* 10 வயதில் யோகா குறித்து புத்தகம் எழுதி வெளியிட்டது…
* இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சேர்த்து மிகச் சிறிய வயதில் மூன்று டாக்டரேட் பட்டங்கள்…
* ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுகளில் பிரிஷா குறித்த பாடம்…

என பிரிஷாவின் வெற்றிப் பக்கங்கள் மூச்சுவிட முடியாத அளவுக்கு நீளும். சிறுவயதிலேயே தன் மனதை ஒருநிலைப்படுத்தி யோகாவையும், மெடிடேஷனையும் தொடர்ந்து செய்யும்போது, உடலுக்குள் உள்ள சக்கரங்கள் செயல்பட ஆரம்பித்ததே இதற்கு காரணம்’’ என்ற தேவிப்பிரியாவிடம் மேலும் பேசியதில்…

‘‘எங்களுக்கு ஊர் திருநெல்வேலி. என் அம்மா யோகாவில் எம்எஸ்ஸி முடித்து அசிஸ்டென்ட் புரொபசராய் பணியாற்றியவர். நான் எம்.ஏ.எம்.எல் முடித்த வழக்கறிஞர் என்றாலும், எம்.எஸ்.ஸி நேச்சுரோபதி மற்றும் யோகா முடித்திருக்கிறேன்.அம்மாவும் நானும் தினமும் காலையில் யோகா செய்வதைப் பார்த்தே பிரிஷாவும் ஒரு வயதில் இருந்தே யோகா செய்யத் தொடங்கினாள். குழந்தையில் அவள் செய்கிற ஆசனங்களை நாங்கள் ஊக்கப்படுத்தி கைகளைத் தட்டத் தட்ட எந்த நேரமும் ஏதாவது ஒரு ஆசனாவை செய்ய முயற்சித்துக் கொண்டே இருப்பாள்.

அட்வான்ஸ்ட் ஆசனா, மிகவும் கடினமான ஆசனாவையெல்லாம் பிரிஷா அசால்டாய் செய்யத் தொடங்கினாள். அதேபோல் என் அம்மாவைப் பார்த்து மெடிடேஷன் செய்யவும் ஆர்வம் காட்டினாள். அவளின் 5 வயதிலேயே மெடிடேஷன் செய்வதையும் அம்மா அவளுக்கு கற்றுக்கொடுத்துவிட்டார்.மற்ற குழந்தைகள் மாதிரி தொலைக்காட்சி பார்ப்பது, கைபேசியில் பொழுதைக் கழிப்பது போன்ற பழக்கங்கள் பிரிஷாவிடம் குழந்தையில் இருந்தே இல்லாமல் இருந்தது. கவனம் முழுவதையும் யோகாவிலும், மெடிடேஷனிலும் குவித்து, தன்னை ஒருநிலைப்படுத்தியதில் அவளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு (intuity power) என்கிற மூன்றாவது கண் திறந்து கொண்டது என்றே நான் சொல்வேன்.

நாமெல்லாம் தனியாக இருந்தாலே நிறைய யோசிப்போம். நமது மண்டைக்குள் பல சிந்தனைகள் ஓடத் தொடங்கும். ஆனால் பிரிஷா எவ்வளவு நேரம் என்றாலும் மனதை ஒருநிலைப்படுத்தி, அமைதியாக மெடிடேஷன் செய்வாள். பிரிஷாவின் உள்ளுணர்வு தூண்டப்பட்டதில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்ல ஆரம்பித்தாள். அவள் நடக்கப் போறதை சொல்றாளா? இல்லை இவள் சொல்றதால அது நடக்குதா என்றே சில நேரம் எனக்குப் புரியாது’’ என்று மீண்டும் அழுத்தமாகப் புன்னகைத்தவர் பிரிஷா குறித்து மேலும் விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘நல்லா வெயில் அடிக்கும், ஆனால் இந்த நேரம் மழை வரும் என்பாள். மழை வரும். சில சமயம் நடக்கவிருக்கும் விபத்துகளை உணர்ந்து, போகவிடாமல் என்னைத் தடுப்பாள். சிலவற்றை இது நடக்காதென உறுதியாகவும் சொல்வாள்.எதிரில் இருப்பவரை கண்களால் ஸ்கேன் செய்து உடலில் இருக்கிற நோயை சொல்வது, அவருக்கு கேன்சர் நோய் வரப்போகுது, ஹீமோகுளோபின் கம்மியாக இருக்கு எனச் சொல்வது, ஒருசில உடல் வலிகளை டச் செய்து சரி செய்வது என பிரிஷா குறித்து சொல்ல நிறைய நிறைய இருக்கு.

கண்ணால் பார்த்தே ஸ்பூனை வளைப்பது, முன்னால் இருக்கிற பொருளை பார்வையால் நகர்த்துவது, தொலைந்துவிட்ட பொருள் கிடைப்பதை சொல்வது, அவளின் அப்பா அடுத்த தெருவில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறார், ஊரில் இருக்கும் பாட்டி என்ன கலர் சேலை உடுத்தி இருக்கிறார், எதிரில் இருப்பவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதையும் சொல்வதற்கு பிரிஷாவால் முடிகிறது.பிரிஷாவின் பிறந்தநாளுக்கு என்னால் எந்த சர்ப்ரைஸும் கொடுக்கவே முடியாது. காரணம், நான் என்ன பரிசுப் பொருளை வாங்கி ஒளித்து வைத்திருக்கிறேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன் என்பதையும் சரியாக சொல்லி

விடுவாள்’’ என்றவர், ‘‘இருந்தாலும் சொல்லக்கூடிய விஷயமாக இருந்தால் மட்டும் பிரிஷாவிடம் இருந்து நம்மால் தகவலைப் பெறமுடியும். ஒருசில விஷயத்தை வெளியில் சொன்னால் தவறாகிவிடும் என அவள் நினைத்தால், எப்படிக் கேட்டாலும் சொல்லவே மாட்டாள்.அதற்காக இதை ஆன்மீகம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை. நமது மனதை ஒருநிலைப்படுத்தி மெடிடேஷன் செய்வதால் நம்முடைய ஆக்னா சக்கரம் முழுமையாய் வேலை செய்ய ஆரம்பித்து, நமது உள்ளுணர்வு தூண்டப்பட்டு விழிப்படைந்துவிடும். இதைத்தான் மூன்றாவது கண் என்கிறோம். பிரிஷாவிடம் இருப்பது மூன்றாவது கண்.

நீங்கள் அவளுடைய இரண்டு கண்களையும் கட்டிவிட்டு எதிரில் இருப்பது என்ன எனக் கேட்டால் மிகச் சரியாக அவளால் சொல்ல முடியும்’’ என ஆச்சரியத்தை மேலும் மேலும் எகிற வைத்தார் பிரிஷாவின் அம்மா.‘‘யோகாவிலும் உடலை மூன்றாக மடக்குவதன் (triple fold) மூலமாக உள்ளிருக்கும் சக்ரா எல்லாம் தானாகவே வேலை செய்யத் தொடங்கிவிடும்’’ என்றவரைத் தொடர்ந்து பிரிஷாவிடம் பேசியதில்…

‘‘யோகா செய்வதால் நோய் வராமல் தடுப்பதுடன், வந்த நோயினையும் நம்மால் சரிசெய்து கொள்ளவும் முடியும். அதேபோல் தினமும் மெடிடேஷன் செய்வதால் நமது உடல், மனம், ஆத்மா என எல்லாமே கூர்மை அடைகிறது. எந்த நிலையிலும் மன அழுத்தத்திற்குள் போகிற வாய்ப்பு இதில் இல்லை’’ என்றவர், ‘‘பார்வை சவால் இருக்கிற 180 மாணவர்களுக்கு தினம் ஒரு மணி நேரம் யோகா வகுப்பு எடுக்கிறேன்’’ என மேலும் நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

‘‘நீங்கள் கண்களைத் திறந்து பார்ப்பதை, என்னால் கண்களை மூடிய பிறகும் பார்க்க முடிகிறது. எதிரில் இருப்பவரை ஒருசில நிமிடம் என் கண்களால் பார்த்தாலே, அவர் உடலில் பிரச்னை இருக்கும் இடத்தில் லைட் எரிகிற மாதிரியான உணர்வு எனக்குள் ஏற்படும். சில நேரம், நடக்கவிருப்பதை முன்கூட்டியே காட்சியாகக் காண்கிற உணர்வும் தோன்றுகிறது.

சில்வர் ஸ்பூனை பார்வையாலே வளைப்பது, பொருளை பார்வையால் நகர்த்துவதை எல்லாம் என் மைன்ட் பவரை வைத்தே செய்கிறேன். இது எல்லாவற்றிலும் மனதை ஒருங்கிணைக்கிற விஷயமே இருக்கிறது. இதற்கு கண்டிப்பாக மெடிடேஷன் அவசியம். இதில் உடலுக்குள் இருக்கும் சக்கராஸ் தூண்டப்பட்டு, உள்ளுணர்வு விழித்துக்கொள்ளும். இதைத்தான் சூப்பர் பவர் என்கிறோம்’’ என்ற பிரிஷாவின் எதிர்கால விருப்பம் மருத்துவர் ஆவதாம். கூடவே உலகம் முழுவதும் யோகா, மெடிடேஷன் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் என்கிறார் இந்த யோகா ஆச்சாரியா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post பிரிஷாவுக்குள் இருப்பது சூப்பர் பவர்! appeared first on Dinakaran.

Related Stories: