இலங்கை: கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக இன்று பதவியேற்கிறார். இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக இலங்கையின் புதிய அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அது யாருக்கும் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அனுர குமார இன்று (செப்.23) இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.
இவர் இலங்கையின் 9வது அதிபர் ஆவார். அனுர குமார திசநாயக்கே அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஜேவிபி (ஜனதா விமுக்தி பெருமுனா) எனப்படும் இடதுசாரி கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள இவர் இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர். ஏகேடி என அழைக்கப்படும் அனுர குமார திசநாயக்க கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு, இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் அநுர குமார திசநாயக! appeared first on Dinakaran.