×

பிரேசில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு பயணம்: நைஜீரியா, கயானா நாடுகளுக்கும் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேற்கண்ட நாடுகளுடன் கயானா, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். பிரதமர் மோடியின் பயணம் வரும் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடையும். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு ெசல்கிறார். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவிலிருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

தொடர்ந்து வரும் 17 முதல் 19ம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்தாண்டு, ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்ட போது, அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார். மாநாடு முடிந்தவுடன் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம், ஜி20 மாநாட்டின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

வரும் 19 முதல் 21ம் தேதி வரை கயானாவில் இருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலியை சந்திக்கிறார். பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் கயானாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போடவுள்ளது. அப்போது இந்தியா-கரீபியன் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். கயானாவின் அதிபர் அலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸின் தலைமை விருந்தினராக அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரேசில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு பயணம்: நைஜீரியா, கயானா நாடுகளுக்கும் செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,G-20 Summit ,Brazil ,Nigeria ,Guyana ,New Delhi ,Africa ,Caribbean ,South America ,PM ,Brazil G-20 Summit ,Dinakaran ,
× RELATED பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார், பிரதமர் மோடி