கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரை வரவேற்க தயாராகும் தமிழக எல்லை: ஜீரோ பாயின்ட்டில் புற்களை அகற்றி வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரை வரவேற்கும் விதமாக தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டில் புற்கள் அகற்றப்பட்டு, வண்ணம் தீட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழகம் – ஆந்திரா நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 500 கன அடிவீதம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

இந்த தண்ணீர் வருகிற 22ம் தேதி இரவு, அல்லது 23ம் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் மழை பெய்ததால் மழை நீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் வேகமாக வரும் எனவும் தெரிகிறது. கிருஷ்ணா தண்ணீர் வருகை எதிரொளியால், தமிழக எல்லையான ஜீரோ பாயின்டில் தற்போது தண்ணீர் அளவீடு செய்யும் பகுதி மற்றும் கரைகளின் இருபுறமும் நீர்வளத்துறை அதிகாரின் உத்திரவின் பேரில், பணியாளர்கள் புற்களை அகற்றியும், கரைகளுக்கு வண்ணம் பூசும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா கால்வாயில் இருந்து கண்ணன் கோட்டை ஏரிக்கு செல்லும் மதகு அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரை வரவேற்க தயாராகும் தமிழக எல்லை: ஜீரோ பாயின்ட்டில் புற்களை அகற்றி வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: