வேடந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் ஒன்றிய செயலாளர் தம்பு மாவட்ட கவுன்சிலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியில் சிறந்து விளங்க செய்து வருகிறார். இதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். இதனால், விளையாட்டிலும் அரசு பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்’ என்றார். இந்த நிகழ்ச்சிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோகன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி வேணும், கவுன்சிலர் சிவபெருமான் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post வேடந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: