மணலி 20வது வார்டு சபை கூட்டத்தில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித்தர கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 20வது வார்டு சபை கூட்டம், நேற்று காலை மண்டல அலுவலக கூட்டரங்கில் நடந்தது. வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது: சின்னமாத்தூர் சாலையில், நகராட்சியாக இருக்கும் போது, ஆறு நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6 வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த குடும்பங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. எனவே, அவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது நரிக்குறவர்கள் தங்கள் கையால் கோர்த்த துளசி மாலையை சூடி, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், உதவி கமிஷனர் கோவிந்தராசு ஆகியோருக்கு வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து பெரியதோப்பு பகுதியில் பட்டா வழங்க வேண்டும், ஏற்கனவே பட்டா வைத்துள்ளவர்களுக்கு, ஆன்லைன் பட்ட பதிய வேண்டும், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் மழைநீர் வடிகால் உடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், கிருமி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும். மணலி சேக்காடு பொது வியாபாரி சங்க தலைவர் டி.ஏ.சண்முகம் பேசும்போது, காமராஜர் சாலையில், குடிநீர் குழாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால் தூசி பறந்து கிளம்பி, விபத்தும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, அந்த பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும் என்றார். மேலும், குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை குறித்த பல்வேறு கோரிக்கைளை பொது மக்கள் முன் வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

The post மணலி 20வது வார்டு சபை கூட்டத்தில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: