மணலி மண்டலத்திற்கு உட்பட்ட 16வது வார்டில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணலி மண்டலம், 16வது வார்டில் சடையங்குப்பம், பர்மா நகர், எலந்தனூர் போன்ற பல பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்ட மையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் குழாய்களில் குடிநீர் சரியாக வருவதில்லை. பல நேரங்களில் தெருக்குழாயில் குறைவாக குடிநீர் வருவதால் ஒரு குடம் நிரம்புவதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பலருக்கு குடிநீர் கிடைக்காமல் கேன்களில் விற்கப்படும் குடிநீரை அதிக பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக இப்பிரச்னை நிலவி வருவதால் பொதுமக்கள் அடிக்கடி சாலை மறியல், மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். மணலி புதுநகர் துவாரகா நகரில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீரை விநியோகித்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மணலி மண்டல குழு கூட்டத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி இதை செயல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கூலி தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் தடையில்லாமல் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணலி மண்டலத்திற்கு உட்பட்ட 16வது வார்டில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: