திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்தால் இளம்பெண்களை செயற்கை கருவூட்டலுக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

சிறப்பு செய்தி
என்ன தான் நவீன வளர்ச்சியில் நாடு உச்சம் தொட்டாலும் சமுதாயத்தில் வெகுஜன மனநிலை என்ற ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஆண் எப்படி இருக்க வேண்டும்? பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்தை குடும்பமும், சமுதாயமும் நமக்குள் ஆழமாக செலுத்தி விடுகின்றன. அதன்பின்னர் வளரும் போது நமக்கென்று தனித் தன்மையை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் சமுதாயம் சொல்கின்ற ஆளாக மட்டுமே மாறுகிறோம்.

இவ்வாறு ஒரு பெண் முழுமையான ஆளாக மாறும் போது, உடல் ரீதியான மாற்றம் மட்டுமே நடக்கிறதே தவிர உளவியல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. மேலும் வெகுஜன மனநிலை உருவாகும் போது ஒரு பெண் எல்லோரும் சொல்வதைக் கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார். திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்து மகப்பேறு சிக்கல்களுக்கு ஆளாகும் பெண்களின் நிலை, இந்த சூழல் வளையத்திற்குள் சிக்கி நிற்கிறது என்பது ஆய்வுகள் வெளியிட்டுள்ள தகவல்.

குழந்தை பெற்றுத் தரமுடியாமல் போனால் சமுதாயத்தில் தகுதியும் மதிப்பும் இருக்காது என்று கருதி, எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னைத்தானே சில பெண்கள் வருத்திக் கொள்கின்றனர். பிள்ளை பெற்றுத் தருவதை தலையாய கடமையாகப் பார்த்து இதில் உடன்பட்டுச் செல்கின்றனர். இந்த உடன்பாடு தான் அவர்களின் தனித்தன்மையை சிதைத்து பல் ேவறு இன்னல்களுக்கும் ஆளாக்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

இது குறித்து மகளிர் நலன் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: பெண்களுக்கு எந்த வயதில் திருமணம் நடந்தாலும் சரி, ஆனால் குழந்தையை மட்டும் உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையே தற்ேபாது பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிறது. திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பமாகாவிட்டால் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கின்றனர். இதற்காகக் கொஞ்ச காலம் காத்திருப்பதில்லை. அதற்கேற்ப அறிவியலும் வளர்ந்துள்ளதால் உடனே செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற முயல்கின்றனர். அதை பயன்படுத்துவது தவறில்லைதான்.

ஆனால் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் அழுத்தம் மற்றும் கட்டுப்பாட்டால் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற இந்த சமுதாயத்தால் உந்தி தள்ளப்படுகின்றனர். இப்படி குழந்தை பெற்ற பிறகு தன்னை தனக்குப் பிடிக்காமல் போகிறது. அப்போது தன்னுடைய குழந்தையையும் வெறுக்கத் தொடங்குவார்கள். இதை மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்று அழைப்பார்கள். ஆனால் அவரது மன உளைச்சலுக்கு அவை மட்டும் காரணமில்லை. இத்தனை காலம் குழந்தை இல்லாமல் வலிமையற்ற நிலையிலிருந்த அவர், குழந்தை பெறும் போது மேலும் வலிமையற்ற சூழலுக்கு உடலளவிலும் மனதளவிலும் தள்ளப்படுகிறார். இதனால் அந்த பெண் மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் செல்கிறார். ஒரு குழந்தை பெற்றெடுப்பதும், வளர்ப்பதும் பிரச்னைக்கு உரியதாகிவிட்டால் அந்த குழந்தையை வளர்க்கும் மொத்த சுமையும் தாய் மீது தான் இந்த சமூகம் திணிக்கிறது.

தற்போது சில இளைஞர்கள் குழந்தை பொறுப்பை அவர்களும் ஏற்கிறார்கள், குழந்தையைக் கவனிக்கின்றனர். அப்படி தந்தை ஒருவர் குழந்தைக்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்கிறார் என்றால் அதைப் போற்றுதலுக்கு உரிய விஷயமாகப் பார்க்கின்றனர். அதே விஷயத்தை ஒரு தாய் செய்யும்போது குழந்தைக்கு அவர் செய்யாமல் யார் செய்வார்கள் என்று மிக இயல்பாகவும் எந்தவித மதிப்பும் இல்லாமல் புறந்தள்ளுகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை குடும்பமும், சமுதாயமும் தாய்மை என்ற தகுதியே மிகவும் சிறந்தது என்று கருதுகிறது. இதனால் குழந்தை பெறுவதுதான் தாய்மையின் அடையாளம் என்று நம்பி, தனக்கென்று தனித்தன்மையை உருவாக்காமல் இருக்கின்றனர். அவ்வாறு தனித்தன்மை இல்லாத காரணத்தால் வெகுஜன மனநிலை, அவர்களின் மனங்களிலும் ஒட்டிக் கொள்கிறது. இந்த சமூகத்தில் ஆணுக்காக அவர்களுடைய வம்சங்களை, வாரிசுகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பெண்களுடைய கடமை என்ற போக்கு உள்ளது. இது மாற்றப்பட்டால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு முடிவு வரும். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.

ஆணுக்கு பெண் அனைத்து துறைகளிலும் சரி சமமாக உயர்ந்து நின்றாலும் பல்வேறு நிலைகளில் பாகுபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு பெரும் வேதனையாக மாறி வருவது மகப்பேறு. ஒரு பெண் பிறந்ததே திருமணமாகி, அடுத்த தலைமுறைக்கு வாரிசை உருவாக்கத்தான் என்ற எண்ணம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பெண்களை குடும்பத்தில் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தும் முறை இன்று வரை நீடித்தும் வருகிறது.

திருமண நாட்டம் குறையக்காரணம்
‘‘தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் திருமணம் வேண்டாம் என்ற நிலைக்கு நகர்கின்றனர். அதற்கான காரணம் இந்த குழந்தை பெறுதல் பற்றிய பயமும், தன்னுடைய எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கனவுகள் எதையும் அடைய முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் தான்.குழந்தை முக்கியமென்று இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குடும்பத்தினர், இந்த குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதால் உன்னுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் படிக்க வைத்தது தவறு, வேலைக்கு அனுப்பியது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் திரும்பத் திரும்ப குடும்பம், சமூகம் மற்றும் ஆணாதிக்க பிடிமானத்துக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர்,’’ என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆணாதிக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை
‘‘ஆணாதிக்கம் என்று சொல்லும்போது அது குறித்த அனைத்து கோபங்களும் ஆண்கள் மீது செல்கிறது. அப்போது பெண்ணியம் என்று ஒன்று உருவாகிறது. இந்த ஆண்களே இப்படிதான், எங்களை இப்படி ஆக்கிவிட்டார்கள், அதற்கு எதிராக ஒன்று சேரப் போகிறோம் என்று பெண்ணியம் எழுகிறது. ஆனால் ஆணாதிக்கம் ஆண்களிடம் மட்டும் இல்லை. ஆணாதிக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லலாம். அதேபோன்று பெண்களைப் பெண்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் அந்தந்த குடும்பத்தில் உள்ள மாமியார் ஆண்களைப் போலத்தான் நடந்துகொள்கின்றனர்,’’ என்கின்றனர் மகளிர் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

The post திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்தால் இளம்பெண்களை செயற்கை கருவூட்டலுக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: