அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!

வாஷிங்டன்: அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்த நாள், நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்ற உள்ளார்.

செப்.,23ல், ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசும் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மிக்சிகனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி அற்புதமானவர் என கூறினார். இருப்பினும் இந்த சந்திப்பு பற்றி மேலதிக உறுதியான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரதமரின் பயணத்திட்டம் பற்றிய அறிவிப்பிலும் கூட இதுகுறித்து ஏதும் இல்லை.

The post அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: