காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சி தேனம்பாக்கம் பாலாற்றங்கரையில் உள்ள காமாட்சியம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் தேனம்பாக்கம் பாலாற்றங்கரையில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 2 தினங்களாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, விசேஷ திவ்ய ஹோமம், யாக சாலைகள் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்களுடன் யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க விண்ணை பிளக்கும் “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற பக்தர்களின் முழக்கங்களுடன் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது, பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் லியோ என்.சுந்தரம், எம்.எல்.மாணிக்கவேலு, எம்.கிருஷ்ணசாமி, டி.தண்டாயுதபாணி ஸ்தபதி சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், சங்கர் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

The post காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: