தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு; உள்நாட்டு உற்பத்தியில் 2ம் இடத்திலும் ஏற்றுமதியில் 3ம் இடத்திலும் உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான அசோசெம் சார்பில் நடத்தப்படும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து பேசியதாவது: எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியில் 42 சதவீத பங்களிப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தில் 30 சதவீத பங்களிப்பையும் வழங்குகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புர பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது.

தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களித்து 2ம் இடத்திலும், ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களித்து 3ம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் 26 லட்சத்து 61 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. இந்த சாதனைகளுக்கு எல்லாம் திராவிட மாடல் ஆட்சியே அடித்தளமாக விளங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கத்தில் ரூ.47 கோடியே 62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தில் தொழில்நுட்ப கருவிகளை உலகத்தரத்தில் பரிசோதிக்கும் உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடம் முதல்வரால் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமத்திற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்எஸ்எம்இ துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், நபார்டு தலைமை பொது மேலாளர் ஷாஜி, தேசிய எம்எஸ்எம்இ நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சு குளோரி ஸ்வரூபா, எல்.ஐ.சி. தென்னிந்திய மண்டல மேலாளர் வெங்கடரமணன், அசோசெம் தலைவர் சுஷ்மா பால் பெரில்லா, இணை தலைவர்கள் சக்திவேல் ராமசாமி, சுதிர் பணிகசேரி, அசோசெம் தமிழ்நாடு மாநில துணை தலைவர் கே.மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு; உள்நாட்டு உற்பத்தியில் 2ம் இடத்திலும் ஏற்றுமதியில் 3ம் இடத்திலும் உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: