6 கொலை உள்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக் கொலை: தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்

சென்னை: 6 கொலை, 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை நேற்று அதிகாலை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். வாகன சோதனையின்போது வழிமறித்த போலீசாரை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டுவிட்டு தப்பி ஓடும் போது, தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சரவணன் சுட்டு கொன்றார்.சென்னையில் கடந்த சில மாதங்களாக கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மாமூல் வசூல், கூலிப்படைக்கு ஆட்களை அனுப்புதல், திட்டமிட்ட படுகொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளின் ஆட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த தென் சென்னையின் பிரபல ரவுடிகளான சிடி மணி, சீசிங் ராஜா, சம்பவ செந்தில், வடசென்னையின் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி உள்ளிட்டோர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி என கருதப்படும் சம்பவ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை கைது செய்ய தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கில், கொலையில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜா மற்றும் சம்பவ செந்திலை கொலை செய்ய வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்தார்.

அதேநேரம், சென்னையில் யார் பெரிய தாதா என்ற போட்டியில், தென் சென்னை ரவுடி சிடி.மணி மற்றும் வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இடையூறாக தாதா சம்பவ செந்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் சம்பவ செந்திலை படுகொலை செய்ய பல வகையில் ரவுடி சிடி.மணி மற்றும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் தனது கூட்டளிகளுடன் பல முறை முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவ ெசந்திலை அவர்களால் படுகொலை செய்ய முடியவில்லை. அதேநேரம் தன்னை படுகொலை ெசய்வதற்கு முன்பு சிடி.மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜியை படுகொலை செய்ய தாதா சம்பவ செந்தில் திட்டமிட்டார். 2021ம் ஆண்டே அதற்கான முயற்சியில் சம்பவ செந்தில் ஈடுபட்டார். வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ஒரே காரில் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி செல்லும் போது, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே சென்ற போது, அவர்களின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. அதில் இருந்து தப்பிய இரண்டு ரவுடிகளையும் பின் தொடர்ந்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது.

ஆனால் ரவுடிகள் சிடி.மணி மற்றும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் உயிர்தப்பினர். அதன்பிறகு வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தலைமறைவாக இருந்தபடி, தனது கூட்டாளிகள் மூலம் பெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை ஒப்பந்தம் எடுத்து பெரிய அளவில் தொழில் செய்து வந்தார். இந்த தொழிலில் போட்டியாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தபடி சென்னையில் கூலிப்படையினரை வைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடிகளை தனியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் ‘ஏ- பிளஸ்’ கேட்டகிரி பட்டியலில் உள்ள வடசென்னை ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை மற்றும் 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவனை கைது செய்ய போலீசார் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்தும் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய கடந்த 2 மாதங்களாக திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

இதற்காக ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆந்திராவில் இருந்து சொகுசு கார் ஒன்றில் சென்னைக்கு வந்துள்ளதாக’, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவுக்கு, ஏற்கனவே ஆந்திராவில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்ய சென்ற தனிப்படையினர் ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி கொடுங்கையூர் போலீசார் முல்லைநகர் மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாதமுனி மற்றும் காவலர் சுகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதை பார்த்த சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை மறித்து சோதனை செய்தனர். காரில் இருந்து 2 பேரில் ஒருவனை இறக்கி போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போதே, காரை இயக்கி வந்த நபர், காருடன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் உதவி ஆய்வாளர் நாதமுனி தலைமையில் போலீசார் தங்களது ரோந்து வாகனம் மூலம் தப்பி சென்ற சொகுசு காரை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் தப்பி சென்ற கார் தொடர்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு உதவி ஆய்வாளர் நாதமுனி தகவல் கொடுத்தார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் உடனடியாக முல்லைநகர் வழியாக வந்த சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்ற போது, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வழியாக வந்து வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் சொகுசு காரை போலீசார், சினிமா பாணியில் அதிகாலை 4.50 மணிக்கு சுற்றி வளைத்து மடக்கினர். உடனே இன்ஸ்பெக்டர் சரவணன் சொகுசு காரில் இருந்த நபரை கீழே இறங்கி வரும்படி எச்சரித்தார். ஆனால் காரில் இருந்த நபர் காரின் கண்ணாடியை இறக்கியபோது, அது கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. உடனே போலீசார் உஷாராகினர். இதை கவனித்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, காரில் வைத்திருந்த தனது துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். ஆனால் போலீசார் விலகியதால் துப்பாக்கி குண்டுகள் போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது பாய்ந்தது.

அந்த நேரத்தில் சொகுசு காரில் இருந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தப்பி ஓடினார். அப்போது உஷாரான இன்ஸ்பெக்டர் சரவணன் தற்காப்புக்காக திருப்பி சுட்டதில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் வலது பக்கம் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி ரவுடி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, உடனே போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன், கமிஷனர் அருண் மற்றும் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். உயிரிழந்த காக்கா தோப்பு பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவுடி வந்த சொகுசு காரை போலீசார் சோதனை செய்த போது, அதில் 10 கிலோ உயர் ரக கஞ்சா மற்றும் கள்ளத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

என்கவுன்டர் நடந்த இடத்திற்கு சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ் குமார் மற்றும் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், எம்கேபி.நகர் உதவி கமிஷனர் சச்சிதானந்தம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வடசென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் வெளிமாநிலங்களில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் 296(பி), 132, 109, 351(3), ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

சென்னை பிராட்வே பிஆர்என். கார்டன் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் கண்மணி தம்பதியின் மகன் பாலாஜி (44). பள்ளியில் படிக்கும் போதே புறா பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசுகளைபெற்றுள்ளார். பாலாஜியின் உறவினர் துரை என்பவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். தனது உறவினர் துரை போல் தானும் வளர வேண்டும் என்று சிறு வயதிலேயே இருந்து பாலாஜி தன்னை ரவுடியாக பாவித்து சரியாக பள்ளிக்கு செல்லாமல் 9ம் வகுப்பிலேயே தனது பள்ளி படிப்பை விட்டு விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது இன்பா என்ற ரவுடியின் பழக்கம் பாலாஜிக்கு கிடைத்தது. அவனுடன் சேர்ந்து வழிப்பறி உள்ளிட்ட சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பிறகு மண்ணடி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து போது, ரவுடி நித்யா (எ)நித்தியானந்தம் மற்றும் கல்வெட்டு ரவி ஆகியோருடன் வழக்கம் ஏற்பட்டு லாரி ஷெட்டுகளில் மாமுல் வசூலித்து வந்தார். அப்போது கடந்த 2005ம் ஆண்டு மாமூல் வசூலிப்பதில் இடையூறாக இருந்த யுவராஜ் என்பவரை பாலாஜி கொலை செய்தார்.

பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் பாலாஜி வளர்ந்ததால் எல்லோரும் பாலாஜியை காக்கா தோப்பு பாலாஜி என்று அடைமொழியுடன் அழைத்தனர். யுவராஜ் கொலைக்கு பிறகு பாலாஜி தனது பெயருக்கு முன்பு காக்காதோப்பு என்று அடைமொழியை இணைத்து கொண்டார். பிறகு 2009 ம் ஆண்டு கார் பார்க்கிங் டெண்டர் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்தார். 2011ம் ஆண்டு பில்லா சுரேஷ் என்பவரை வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அவரது மனைவி கண்முன்பே தலையை வெட்டி கொலை செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜய் (எ) விஜயகுமாரும் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளும் அடுத்தடுத்த அரை மணி நேரத்தில் நடந்தது. இந்த இரட்டை கொலைகள் வடசென்னை போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

அதன் பிறகு 2013ம் ஆண்டு விஜி என்பவரை கொலை செய்தார். அதே ஆண்டில் பிரபல வடசென்னை ரவுடியான கல்வெட்டு ரவியின் கூட்டாளியான வெங்கட்டா என்பவனை கொலை செய்தார். சிறையில் காக்கா தோப்பு பாலாஜி இருந்த போது ரவுடி நடராஜன் உடன் நட்பு ஏற்பட்டு, அதன் மூலம் மணல்மேடு சங்கரின் நட்பு கிடைத்துள்ளது. இதனால் காக்கா தோப்பு பாலாஜி படிப்படியாக வளர்ந்தார். வடசென்னையில் தனக்கு என தனியாக ஒரு இடத்தை காக்கா தோப்பு பாலாஜி உருவாக்கினார்.

இதற்காக வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரன் கூட்டாளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வடசென்னையில் அசைக்க முடியாத ரவுடியாக உருவான காக்கா தோப்பு பாலாஜி செம்பரம் கடத்தலிலும் கால் பதித்தார். பிறகு ரியல் எஸ்டேட், தொழிலதிபாகள், வியாபாரிகளை மிரட்டி பல கோடி ரூபாய் வசூலிக்க தொடங்கினார். அதன் பிறகு தான் தாதா சம்பவ செந்திலுடன் ரவுடி காக்கா ேதாப்பு பாலாஜிக்கு நேரடியாக தொழில் போட்டி ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் தனது சாம்ராஜ்யத்தை காக்கா தோப்பு பாலாஜி விரிவுபடுத்தினார். இதன் விளைவாக தற்போது போலீசார் என்கவுன்டரில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கொன்றனர்.

The post 6 கொலை உள்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக் கொலை: தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் appeared first on Dinakaran.

Related Stories: