கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு விசாரணையின்போது குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலிட்ட அட்வகேட் ஜெனரல்: ஐகோர்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே திடீர் பரபரப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளது. தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் வருவதாக கூறப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சிபிஐயால் மட்டுமே விசாரிக்க முடியும்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதற்காக மாதவராவ் என்பவர் அதிமுக ஆட்சியில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு கொடுத்த தொகையை பட்டியலிட்டார். இதை கேட்ட மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு என்றார். இதையடுத்து விசாரணையை 10ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு விசாரணையின்போது குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலிட்ட அட்வகேட் ஜெனரல்: ஐகோர்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: