தண்டையார்பேட்டை, செப்.2: காசிமேடு இந்திரா நகர் பள்ளப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு, இங்குள்ள ஒரு குடிசை வீடு, திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றில் தீ பரவி, அருகில் உள்ள குடிசை வீடுகளும் எரிந்தது. இதை பார்த்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து ராயபுரம், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் 11 குடிசை வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அறிந்த ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மற்றும் திமுக பகுதி செயலாளர் செந்தில்குமார், துணை தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் எம்எல்ஏ வழங்கினார். மேலும் அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
The post காசிமேட்டில் நள்ளிரவு தீவிபத்து 11 குடிசைகள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.