நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவம்: செங்கல்பட்டு ஆண் செவிலியருக்கு அமைச்சர் சா.மு.நாசர் பாராட்டு

சென்னை: நடுவானில் ஆந்திர கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த செங்கல்பட்டை சேர்ந்த ஆண் செவிலியருக்கு சிறுபான்மையினர் அமைச்சர் சா.மு.நாசர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சிங்கப்பூரிலிருந்து கடந்த 22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. இதில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தாகூர் மற்றும் 8 மாத கர்ப்பிணியான தீப்தி (37) என்பவரும் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே தீப்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூர் முதல் சென்னை வரையிலான விமான பயண நேரம் மொத்தம் 4.30 மணி நேரம் என்பதால் சென்னையில் தரையிறங்கும் வரை பிரசவத்தை தள்ளிப்போடுவது ஆபத்தானது.

இந்நிலையில் விமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வளர்குன்றம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (28) என்ற ஆண் செவிலியர், அந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளித்து பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் நல்லபடியாக தாய் மற்றும் சேயை காப்பாற்றியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தைக்கு 2 மணி நேரம் சிபிஆர் கொடுத்து அந்த குழந்தையின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். இந்த தகவலை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், செவிலியர் கண்ணனை நேரில் அழைத்து ‘35 ஆயிரம் அடி உயரத்தில், ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இரண்டு உயிர்களை காப்பாற்றி, தமிழர்கள் எந்த இடத்திலும் பிரதிபலன் பாராது உதவி செய்வார்கள் என்று செயல் மூலம் நிரூபித்து காட்டியுள்ளீர்கள்,’ என்று பாராட்டு தெரிவித்தார்.

The post நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவம்: செங்கல்பட்டு ஆண் செவிலியருக்கு அமைச்சர் சா.மு.நாசர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: