டெல்லியில் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் புறக்கணிப்பு.! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலையில்கூடியது. ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா உட்பட 8 முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஒன்றிய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015ம் ஆண்டில் ஒன்றிய பாஜக அரசால் ‘நிதி ஆயோக்’ (தேசிய கொள்கை குழு) கொண்டு வரப்பட்டது. தேசிய அளவிலான வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே, நிதி ஆயோக்கின் முதன்மை நோக்கமாகும். நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை உள்ளடக்கிய குழு என்பதால், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், ‘2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். ‘வளர்ந்த பாரதம்-2024’ தொலைநோக்குப் பார்வைக்கான அணுகுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது. ஒன்றிய-மாநில அரசுகள் இடையிலான நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே கூட்டத்தின் நோக்கமாகும். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநில தலைமைச் செயலர்களின் தேசிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, குடிநீர், மின்சாரம், சுகாதாரம், பள்ளிக் கல்வி, நிலம்-சொத்து ஆகிய 5 கருப்பொருள்களின்கீழ் மாநில தலைமைச் செயலர்கள் மாநாட்டில் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டது.

குறிப்பாக பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதோடு, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவால்தான் பாஜக அரசு நீடிக்கும் நிலையில், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கு இதுபோன்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.அதுவும் தமிழ்நாடு என்றோ, தமிழ் என்றோ ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஏன் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறளை கூறித்தான் பட்ஜெட் படிக்க ஆரம்பிப்பார்கள். இந்த ஆண்டு திருக்குறளைக் கூட படிக்காமல் உரையை ஆரம்பித்தார். இதனால், தமிழகத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

மேலும், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களான சித்தராமையா, சுக்விந்தர் சிங் சுகு, ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் (ஆம் ஆத்மி) ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டனர். அதேநேரம் டெல்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளது. ஆனால் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தங்களது தரப்பு கருத்தை தெரிவிப்பதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று குடியரசு தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில், பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் ‘வளர்ந்த பாரதம்-2024’ தொலைநோக்குப் பார்வைக்கான அணுகுமுறை, ஜிடிபி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து, 2047ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கு, உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டு ஆலோசனைகள் நடந்தன. மேலும் கடந்தாண்டு டிசம்பர் 27 முதல் 29ம் தேதிகள் வரை நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்களின் 3வது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் நிதி ஆயோக்கின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசும்போது 5 நிமிடமே ஒதுக்கப்பட்டதால், அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் அவர் நிதி ஆயோக்கிற்கு பதிலாக பழைய முறைப்படி மத்திய திட்டக்குழுவை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேநேரம் பாஜக கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை என்பதால் முதல்வர் ரங்கசாமி கடும் அப்செட்டில் இருப்பதாகவும், அதனால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

The post டெல்லியில் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் புறக்கணிப்பு.! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: