ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: வில்லன் நடிகர் விநாயகன் கைது

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடங்கி தற்போது வில்லன், நாயகன் என முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் விநாயகன். தொட்டப்பன் உள்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. தமிழில் திமிரு, எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், மதுரை சம்பவம், சிறுத்தை உள்பட பல படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார். மலையாளம், தமிழ் தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் இவர் நடித்துள்ளார். அடிக்கடி ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசுவதும், குடிபோதையில் பொது இடங்களில் ரகளை செய்வதும் இவரது வழக்கமாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சொத்து பிரச்னை தொடர்பாக உறவினர் ஒருவரை தாக்கியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்தபோது அவர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக விநாயகன் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கொச்சியிலுள்ள அவரது வீட்டின் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் நடிகர் விநாயகன் நேற்று கொச்சியிலிருந்து ஐதராபாத் வழியாக கோவாவுக்கு விமானத்தில் சென்றார். ஐதராபாத் விமான நிலையத்தில் இவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் விநாயகன் சோதனைக்கு உடன்படவில்லை.

இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென பாதுகாப்பு அதிகாரியை விநாயகன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விநாயகனை கைது செய்து ஐதராபாத் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: வில்லன் நடிகர் விநாயகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: