தாபாவில் மது விருந்து: அதிமுக பிரமுகர் கைது

 

சென்னை, ஜூலை 22: தாபாக்களில் சட்ட விரோத மது விருந்து அளித்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பைபாஸ், கவரப்பேட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாபா ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மதுவிருந்து நடைபெறுவதாக சிப்காட் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இரவோடு இரவாக நேற்று முன்தினம் அனைத்து தாபாக்களிலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள செவன் ஸ்டார் தாபாவில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மறைவிடத்தில் மது விருந்து நடைபெற்றது. சட்டவிரோதமாக மது விருந்து அளித்த செவன் ஸ்டார் தாபா உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான ஏழுமலை (41) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதேபோல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஹைவே தாபாவிலும் போலீசார் சோதனை செய்தபோது மது விருந்து நடைபெற்றது உறுதியானது. இதனால் தாபாவின் உரிமையாளர் நசீர்(58) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தாபாவில் மது விருந்து: அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: