தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்

வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ நாதமுனிகள். அவர் 1199 வருடங்களுக்கு முன்னால், நம் தமிழ்நாட்டில் காட்டு மன்னார்குடி என்னும் ஊரில் அவதரித்தவர். வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை பெரிது. அவரைப் பற்றி சுருக்கமாக காணலாம்.

அவதரித்த காலம்

நாதமுனிகள் கி.மு 823ம் ஆண்டு அவதரித்து, 918ல் மறைந்தார். அவர் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பது பல அறிஞர்களின் முடிவு. சோபகிருது வருஷம், ஆனி மாதம், வளர்பிறை திரயோதசி திதியில், புதன் கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதன். பரம வைதிகராக வேத சாத்திரங்களையும், இசையையும் கற்று கல்வி கேள்விகளில் வல்லவராக இருந்தார். யோக சாஸ்திரங்களில் (அஷ்டாங்க யோகத்தில்) நிபுணராக திகழ்ந்தார். கண்ணனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தில் அவதரித்தார்

காட்டுமன்னார்கோயில்

இவர் அவதாரம் செய்த காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது. சைவத்தில், நாயன்மார்களின் தேவார திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர் என்னும் ஊரும் காட்டுமன்னார் கோயிலுக்கு பக்கத்திலேயே உள்ளது. இந்த விஷயத்தில் சைவத் திருமுறைகளையும், வைணவ பிரபந்தத்தையும், கண்டெடுத்து, தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் பரப்பிய இரண்டு சமய அருளாளர்களும் அவதரித்த ஊர் என்ற பெருமை இந்த ஊருக்கு உண்டு.

நாதமுனிகளுக்கு நாலாயிரம் கிடைத்தது எப்படி?

ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களும் நாதமுனிகளுக்கு கிடைத்தது எப்படி? அந்தப் பாசுரங்கள் எல்லாம் மறைந்துவிட்டது என்பதை எப்படி கண்டுபிடித்தார்? என்கிற கேள்வி எழுகிறது அல்லவா. ஆம். அது ஒரு சுவையான கதை. பரம வைதிகரான, யோக சாஸ்திரத்தில் வல்லவரான, வேதாந்த சாஸ்திரத்தில் நிபுணரான நாதமுனிகள் ஒரு நாள் சில யாத்திரிகர்கள், ஒரு அழகான தமிழ்ப் பதிகத்தை, தேனும் பாலும் அமுதமும் கலந்து தித்திக்கும்படியாக இறைவன் திருமுன் பாடுவதைக் கேட்டார். அவர் மனது முழுக்க அந்தப் பாசுரமே நிரம்பியது. அந்தப் பாசுரத்தின் அமைப்பிலும், இசையிலும், வார்த்தைகளிலும் அவருடைய மனம் லயித்தது. வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை. அவர்கள் பாடுவதைக் கேட்டு கொண்டிருந்தார். அந்தப் பாசுரம் இது.

ஆரா அமுதே! அடியேன்
உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய
உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக்
கிடந்தாய்! கண்டேன் எம்மானே!’’

தமிழைத் தேடிய தளராத முயற்சி கடைசியில், ஆழ்வார் திருஅவதார பிரதேசமான திருக்குருகூர் என்று சொல்லப்படும் ஆழ்வார்திருநகரி சென்றார். அங்கேயும் அவருக்கு ஆயிரம் பாசுரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அங்கே அவருக்கு வேறு ஒரு பிரபந்தம் கிடைத்தது. “கண்ணிநுண் சிறுத்தாம்பு’’ என்கின்ற அந்த பிரபந்தம் மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்டது. மதுர கவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களையும் அவர்தான் எழுதினார். அந்த மதுரகவியாழ்வார் வம்சத்தில் வந்த பராங்குசதாசர் என்கின்ற பெரியவர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் போற்றி எழுதிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு அளித்தார். “இதை பன்னீராயிரம் முறை நீங்கள் தொடர்ந்து ஒரு சொல்லி வந்தால், நம்மாழ்வார் உங்களுக்குக் காட்சி தருவார்” என்கின்ற செய்தியை சொன்னார்.

 

The post தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல் appeared first on Dinakaran.

Related Stories: