பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. வாத்சல்யம் என்றால் என்ன?

பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. வாத்சல்யம் என்றால் என்ன?
– இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

குற்றம் குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம்தான் வாத்சல்யம் என்று பொருள். அதாவது பிறந்த கன்றிடம் தாய்ப்பசு காட்டும் அபரிமிதமான அன்பை வாத்சல்யம் என்று சொல்வார்கள். கன்று பிறந்தவுடன் அழுக்காக இருக்கும். தாய்ப்பசு தன்னுடைய நாக்கால் அந்த அழுக்குகளை எல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்தும். அதனை பரம போக்கியமாகக் கருதும். அப்படிக் குற்றங்களை சாதாரணமாக ஏற்றுக்கொண்டு அருள்புரியும் இறைவனுடைய குணங்களைத்தான் வாத்சல்யம் என்று சொல்லுகின்றார்கள். அதனால் பகவானுக்கு பக்தவத்சலன் என்று ஒரு திருநாமம் உண்டு. பக்தர்களிடம்
வாத்சல்யம் மிகுந்தவன் என்று பொருள்.

பிடாரி அம்மன் என்று சொல்கிறார்களே பிடாரி என்றால் என்ன பொருள்?
– சத்தியநாராயணன், அயன்புரம்.

இரண்டு விதமாக இதற்குப் பொருள் சொல்கிறார்கள். திரிபுரம் எனப்படும் முப்புரத்தை காவல் காத்தமையால் முப்புராரீ என்பது மருவி முப்புடாதி, முப்பிடாதி, முப்பிடாரி என்று வந்தது. பிடரி என்றால் கழுத்து. மூன்று முகங்களுடன் மூன்று பிடரிகள் கொண்ட அம்மன் முப்பிடாரி சொல்கிறார்கள். அதுவே மருவி முப்புடாதி என ஆகியது. இந்த அம்மன் பலருக்கு குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகின்றாள். திருநெல்வேலி மாவட்டங்களில் முப்புடாதி அம்மன் மிகவும் பிரசித்தம்.
வேத அறிவு இருந்துவிட்டால் நாம்

ஆன்மிகத்தில் உயர் நிலையை அடைந்து விட முடியுமா?
– அருள், தூத்துக்குடி.

அது துணைபுரியும். ஆனால், வெறும் வேதப் படிப்பில் ஆன்மிகம் வந்துவிடாது. இதற்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அருமையான விளக்கம் தருகின்றார். பஞ்சாங்கத்தில் இவ்வளவு மரக்கால் மழை பெய்யும் என்று போட்டிருக்கும். பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் அதிலிருந்து நீர் வருமா? ஒரு சொட்டு நீர் கூட வராது. வேதங்களையும் நீதி நூல்களையும் படித்தாலும் அவற்றின்படி நடக்காவிட்டால் என்ன பயன்? இதை வள்ளு வரும், ‘‘கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக’’ என்றார். வேதத்தைப் படிப்பதை விட வேதத்தில் சொன்னபடி நடப்பது உயர்வானது.

பக்தியில் நாம் எதையாவது ஒன்றை எதிர்பார்த்து கோயிலுக்குச் செல்வது அத்தனை உயர்வானது இல்லை என்று சொல்கிறார்களே?
– வண்ணை கணேசன், சென்னை.

உண்மைதான். பக்தியில் காம்ய பக்தி என்றும் நிஷ்காம்ய பக்தி என்றும் சொல்வார்கள். காம்ய பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட பலனுக்காக நேர்த்திக்கடன் இருப்பது, கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்வது போன்றவற்றைச் சொல்லலாம். நிஷ்காமிய பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வது. இது உயர்ந்த நிலை. இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். நாம் விரும்பியது கிடைப்பதற்காகத்தானே கோயிலுக்குப் போகிறோம். நிஷ்காமிய பக்தியால் என்ன பலன்? என்று கேட்கலாம். ஆனால் ஒரு சூட்சுமம் உண்டு. காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டும் தான் கிடைக்கும். நிஷ்காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததும் கிடைக்கும், உங்களுக்கு நன்மை தருகின்ற அத்தனை விஷயங்களும் கிடைக்கும்.

கோயில் கர்ப்ப கிரகத்தின் முன்னால் விழுந்து வணங்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?
– விநாயகராமன், நெல்லை.

ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் அந்த ஆலயத்தின் வழிபாட்டு விதிகளை நாம் தெரிந்து கொண்டு வழிபாடு நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும். கருவறைக்கு முன்னால் நேரடியாக விழுந்து வணங்குகின்ற முறை ஒரு சில சிறிய கோயில்கள் தவிர வேறு எங்கும் இல்லை. பிராகாரத்தை வலம் வந்து கொடிமரம் பலி பீடம் முன்னால் தான் விழுந்து வணங்க வேண்டும். பலி பீடத்தின் முன்னால் “என் கெட்ட எண்ணங்கள் அத்தனையையும் பலி கொடுத்து விட்டேன்; உன்னையே நம்பி உன் காலடியில் விழுந்து விட்டேன்” என்று சொல்வது போல விழுந்து வணங்க வேண்டும். இன்னொரு விஷயம். மிக அதிகமான கூட்டம் இருக்கக்கூடிய கோயிலில் கருவறைக்கு முன்னால் விழுந்து வணங்குவது என்பது நிர்வாக ரீதியிலும் பல சிரமங்களைத் தரும் அல்லவா. எல்லா அம்சங்களையும் யோசித்துத்தான் சில ஆகம விதிகளைக் கூட நம்முடைய பெரியவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். நம்முடைய வழிபாடு மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.

The post பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. வாத்சல்யம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: