வேண்டாம் முகஸ்துதி!

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தியாக நடித்த நாகேஷ் கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? காரியம் ஆவதற்காகக் கூழைக்கும்பிடு போட்டு, எதிரில் இருப்பவரைப் புகழ்ந்து தள்ளி விடுவார். அந்தத் தகுதிகள் அவரிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். முகஸ்துதி எனும் கணையால் ஆளை வீழ்த்திவிடுவார்.

நிஜ வாழ்க்கையிலும் இப்படிப் பலர் உள்ளனர். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்? மனிதர்களிடம் உள்ள இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, ‘இந்திரன் சந்திரன்’ என்றெல்லாம் அளந்துகொட்டி ஆதாயம் தேடுவார்கள். முகஸ்துதி வேறு, பாராட்டு வேறு. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒருவரிடம் உண்மையிலேயே திறமையும் ஆற்றலும் நல்ல பண்புகளும் இருக்கின்றன எனில், எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அவரைப் புகழ்ந்து பேசுவதுதான் பாராட்டு.

ஆனால், முகஸ்துதி இதற்கு நேர் எதிரானது. காரியம் சாதித்துக் கொள்வதற்காகப் பொய்யாகப் புகழ்ந்து தள்ளுவது. ஐஸ் வைப்பது, காக்காய் பிடிப்பது என்றெல்லாம் சொல்கிறோமே, அவையெல்லாம் இந்த முகஸ்துதிக்குள் வந்துவிடும். முகஸ்துதி ஆபத்தானது. இல்லாததைச் சொல்லி ஒருவரைப் புகழ்ந்து தள்ளும்போது, நாளடைவில் அவருக்குள் ஓர் அசட்டுத் தனமான நம்பிக்கை தோன்றக்கூடும். “ஓஹோ…இந்தப் பண்பு நம்மிடம் இருக்கிறது போல” என்னும் தவறான எண்ணத்தில் செயல்படப்போய் தோல்வியைத் தழுவும் விபரீதங்களும் தோன்றலாம்.

‘‘முகஸ்துதி செய்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்” என்கிறது இஸ்லாமிய வாழ்வியல். நபி(ஸல்) அவர்கள், “முகஸ்துதி செய்பவர்களின் முகத்தில் மண்ணை வீசுங்கள்” என்று கூறியுள்ளார்கள். அதாவது, முகத்துக்கு நேரே புகழ்ந்து பேசுபவர்களை நம்பாதீர்கள் என்பது பொருள்.

ஒருவர் தம் நண்பனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது நபிகளார் அவரைப் பார்த்துக் கூறினார்கள். “உன்மீது கேடு உண்டாகட்டும். நீ உனது நண்பனின் கழுத்தை முறித்து விட்டாய். ஒரு மனிதனைப் பாராட்டுவதைத் தவிர வேறு வழி இல்லாத நிலையில் அவர் இவ்வாறு சொல்லட்டும்: நான் இன்னார் இப்படிப்பட்டவர் என்று கருதுகிறேன். இறைவன்தான் அவரைப்பற்றி தீர்ப்பளிக்க வேண்டும். இறைவனிடத்தில் அவருடைய தூய்மை எப்படியிருக்கும் என்பதை என்னால் கூற முடியாது.”

முகஸ்துதிதான் கூடாதே தவிர, நல்ல விஷயங்களை எந்த உள் நோக்கமும் இன்றி பாராட்டுவதில் தவறு இல்லை. இறைத்தூதர் அவர்களே தம் இனிய தோழர்கள் குறித்துப் பல்வேறு சமயங் களில் பல்வேறு பாராட்டுரைகளை
வழங்கியுள்ளார். எடுத்துக்காட்டாக: “சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. இந்த எட்டு வாசல்கள் வழியாகவும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள்” என்று தம் ஆருயிர்த் தோழர் அபூபக்கரை நோக்கி நபிகளார் நவின்றுள்ளார். காரணம், மார்க்கப் பணிகளிலும் மக்கள் சேவையிலும் இறைவழிப் போராட்டங்களிலும் அபூபக்கர் செய்த நல்லறங்களும் தியாகங்களும்தாம். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஆகவே, முகஸ்துதி வேறு, பாராட்டு வேறு என்பதைத் தெளிவோம். முகஸ்துதியைத் தவிர்ப்போம். கூழைக்கும்பிடு அல்லது “கூழை ஸலாம்” போடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை
“கசப்பாக இருந்தாலும் உண்மையையே பேசுங்கள்.” நபிமொழி.

The post வேண்டாம் முகஸ்துதி! appeared first on Dinakaran.

Related Stories: