‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம் வீடியோகாலில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: உதவித்தொகை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்

சென்னை: ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளை வீடியோகால் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து ‘நீங்கள் நலமா‘ திட்டத்தின் கீழ், அரசின் பல்வேறு திட்ட பயனாளிகளை வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களை கேட்டறிந்தார்.

அதன்படி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற கோயம்புத்தூரை சேர்ந்த சித்ரலேகாவிடம் முதல்வர் பேசினார். அப்போது சித்ரலேகா கூறும்போது, ‘‘ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தை நடத்தி வருகிறேன். நான் தொழில் தொடங்க கடன் வாங்குவதற்காக மாவட்ட தொழில் மையத்தை அணுகியபோது, அங்குள்ள அலுவலர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு புதிதாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பற்றி விளக்கினர். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு எளிமையாக இருந்தது. பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, ஒரு மாதத்தில் தொழில் தொடங்க ₹68,37,000 மானியத்துடன் கடன் முதல்வரால் வழங்கப்பட்டது. என்னை போன்றவர்களுக்கு இது வரப்பிரசாதமான திட்டம். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சஞ்ஜய் என்பவரின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக பேசினார்.
அப்போது, அவர் ‘‘தான் வீட்டு வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், மகன் சஞ்ஜய் நேஷ்னல் பள்ளியில் படித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ₹1,500 தொடர்ச்சியாக, வங்கியின் மூலமாக பெற்று வருவதாகவும், அதிகாரிகள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதந்தோறும் 14ம் தேதி ₹1,000 வங்கி கணக்கில் வருகிறது. உடன்பிறந்த அண்ணன் போன்று உதவி வரும் முதல்வருக்கு நன்றி. அந்த பணத்தை கொண்டு 10ம் வகுப்பு படிக்கும் மூத்த மகனுக்கு ₹500 டியூஷன் கட்டணம் செலுத்தி விடுவதாகவும், மீதி பணத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48’ – என்ற திட்டத்தில் பயன்பெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனிடம் முதல்வர் பேசினார். அவர் கூறும்போது, ‘‘தனக்கு சமீபத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு உதவி செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி”யை தெரிவித்துக் கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி கீர்த்திகா தாயார் சங்கீதாவிடம் முதல்வர் பேசினார். அவர் கூறும்போது, ‘‘அச்சங்குடி தொடக்கப் பள்ளியில் தனது மகள் கீர்த்திகா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் காலை 8 மணிக்கே பள்ளிக்கு சென்று விடுவார். காலை உணவு நன்றாக இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

உதவித்தொகையை நம்பித்தான் குடும்பமே..
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தில் பயன்பெற்று வரும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுகன்யாவின் சகோதரரிடம் தொலைபேசி மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ‘‘நான் இரு கண்களையும் இழந்த மாற்றுத்திறனாளி. எனது அக்கா சுகன்யாவிற்கு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது அக்கா மகனும் மூளை வளர்ச்சி குன்றியவன். எனக்கும் அக்காவிற்கும் மாதந்தோறும் தலா ₹1,500, மேலும் எனது அக்கா மகனுக்கு ₹2,000 மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை தொடர்ந்து வருகிறது. இந்த உதவித்தொகையை நம்பித்தான் குடும்பமே உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் அலுவலர்களெல்லாம், நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்” என்றும் கூறினார்.

The post ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம் வீடியோகாலில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: உதவித்தொகை குறித்த தகவல்களை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Related Stories: