பயணிகள் பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பு: ஆடு, மாடுகளை போல் ஏற்றிச் செல்வதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்

மும்பை: மும்பை புறநகர் ரயில் சேவையில் ஆடுமாடுகளை போல் பயணிகளை ஏற்றிச் செல்வதை, மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையானது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆபத்தானதாக முடிகிறது. குறிப்பிட்ட நேரங்களில் ரயில்களில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தில் ஏற்படும் பிற விபத்துகளால் பயணிகள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

பயணிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்பிரச்னையை மிக தீவிரமான பிரச்னையாக கருதி கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, யத்தின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கடந்த 2023ல் 2,590 பயணிகள் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தனர்; ஒவ்வொரு நாளும் ஏழு பேர் பலியாகின்றனர். இதே காலகட்டத்தில் 2,441 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 1,650 பேரும், மேற்கு ரயில்வே பிரிவில் 940 பேரும் உயிரிழந்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மும்பையின் நிலைமையை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது. இவ்விவசாயத்தில் மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எதையும் செய்ய முடியாது என்று கூறக்கூடாது. ஆடுமாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள். இவ்வாறு பயணிகள் பயணிக்க நிர்பந்திக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மேற்கு மற்றும் மத்திய ரயில்வேயின் பொது மேலாளர்கள், இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

The post பயணிகள் பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பு: ஆடு, மாடுகளை போல் ஏற்றிச் செல்வதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: