நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

சென்னை: நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர் கோரியுள்ளது. 2024-2025-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் தமிழ்நாடு அரசு கோரியது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி தரப்பட உள்ளது.‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.

ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ‘ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்’ என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் மையத்தில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. மதுரை மற்றும் கோவை மையத்தில் தலா 350 பேருக்கு வங்கிப் பணி தேர்வுக்கு உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்! appeared first on Dinakaran.

Related Stories: