நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்


தேனி: முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி ₹6 கோடி வரை மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது தேனி குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ₹1 லட்சம் முதலீடு செய்தால், ஓராண்டுக்கு பின்பு ₹1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதி நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன், தேனி அருகே வடபுதுபட்டியைச் சேர்ந்த பிரேமாவிடம் தெரிவித்தார். ₹25 லட்சம் செலுத்தினால் நிறுவனத்தின் இயக்குநர் ஆகலாம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி பிரேமா பல தவணைகளாக ₹72 லட்சத்தை வழங்கியுள்ளார். இவரது உறவினர்களும் ₹1.50 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால் ஓராண்டு கழித்து முதிர்வுத்தொகை கிடைக்காத நிலையில் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மேலும் 7 பேரிடம் வேலை தருவதாக கூறி ₹26 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்தது. ₹99.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார், மேலாளர் மணிகண்டன் மற்றும் இயக்குநர் உட்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தேனி குற்றப்பிரிவு போலீசிலும் புகார்களை கொடுத்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர், நிதி நிறுவன மேலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மூலமாக முதலீடு செய்த வகையில் ₹5 கோடி வரை மோசடி செய்யப்பட்டது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

இதுவரை சுமார் 100 புகார்கள் வரை வந்துள்ளன. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள நிறுவன இயக்குநர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

The post நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: