புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது

புழல்: புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை சென்னை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மினி லாரி டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர். புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சென்னை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று புழல் சிக்னல் ஜி.என்.டி சாலை மற்றும் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை சிக்னல் ஆகிய இரண்டு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி நோக்கிச் சென்ற மினி லாரியை பிடித்து சோதனை செய்து 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட புழல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், சென்னை மூலக்கடை பகுதியைச் சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த நல்லாணி குமார் என்பவருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதாக தெரிவித்தனர். இதேபோல், செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரி நிறுத்தி சோதனை செய்ததில் 3000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மினி லாரி டிரைவர் ராஜா(எ) நாகராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரித்ததில், வசந்த், மாரியப்பன் ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தச் சொன்னதாக தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவான வசந்த், மாரியப்பன் மற்றும் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த நல்லாணி குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

The post புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: