முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த போலீஸ்காரர் கைது: மணக்கோலத்தில் சிக்க வைத்த பெண் போலீஸ்


நித்திரவிளை: முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிலிப்ஸ். இவரது மூத்த மகள் ஆஷா (27).(இருவர் பெயரும் மாற்றம்) . ஆஷாவுக்கும் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருக்கும் நேற்று மதியம் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் நடந்தது. ராஜேஷ் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு அந்த பகுதியில் இருந்து பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் ஆஷாவின் உறவினரான ஒரு பெண் போலீசும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு, புது திருமண தம்பதிகளை படம் எடுத்து காவலர் வாட்ஸ்அப் குரூப்பில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் பல கமென்ட் வந்த நிலையில், ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும் தகவல் வந்தது. உடனே அவர் ஆஷா வீட்டிற்கு தகவல் கொடுத்தார். அப்போது திருமணம் முடிந்து புதுமண தம்பதி மணமகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். பெண் வீட்டார் ராஜேஷை வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து பிடித்து வைத்து விட்டு, நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை எழுத்தராக பணிபுரிபவர் என்பதும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பதும் தெரிய வந்தது. கொரோனா கால கட்டத்தில் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆஷா வேலைக்கு செல்லும் போது, பணி நிமித்தமாக வந்த ராஜேசுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அப்போது அப்பா அம்மா இறந்து விட்டார்கள், உறவினர்கள் எவரும் இல்லை , நண்பர்கள் மட்டும் தான் உண்டு என்றும் கூறியுள்ளார்.அதனை ஆஷா முழுமையாக நம்பிவிட்டார். நேற்று ராஜேஷ் ஐந்து நண்பர்களுடன் வந்து தான் திருமணம் செய்துள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததும் ஐந்து நண்பர்களும் மாயமாகி விட்டனர். இது சம்பந்தமாக ஆஷா நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் திருமணம் ஆனதை மறைத்து, மற்றொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

திருமணமான பெண்ணை தூக்கி வந்து தாலி கட்டினார்
ராஜேஷ், முதலில் ராஜபாளையம் பட்டாலியனில் வேலை பார்த்துள்ளார். அப்போது சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதே சமயம் பெண் வீட்டார் ராஜேசுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த அன்று இரவே தான் காதலித்த பெண்ணை, கணவன் வீட்டிலிருந்து தூக்கி வந்து தாலி கட்டி , அந்த பெண்ணுடன் தான் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். முதல் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. நேற்று முன்தினம் மாலை வரை மணிமுத்தாறில் தான் இருந்துள்ளார்.

The post முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த போலீஸ்காரர் கைது: மணக்கோலத்தில் சிக்க வைத்த பெண் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: