திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டம்; பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: திருவள்ளூரில் நடந்த இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் செல்வபெருந்தகை பேசுகையில் பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது என குற்றம்சாட்டினார். திருவள்ளூரில் நாடாளுமன்ற தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசியதாவது: பாஜ கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தது. அதற்கு அதிமுக துணை போனது.

இந்த தேர்தல் இரண்டாம் சுதந்திரப் போர் என்று சொல்லலாம். பாஜவின் கொள்கை கோட்பாடுகள், இந்த தேசத்தை அழிப்பதற்கான கட்சி, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளியேற்றுவதற்காகவும் நடைபெறும் தேர்தலாக இது அமைந்துள்ளது. ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு அதிபர், ஒரு மொழி என்று சர்வாதிகார நாடாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே கொடி என்றால் காவிக்கொடி, மொழி என்றால் அது இந்தி மொழி, ஒரு அதிபர் என்றால் மோடி, எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை. ஆனால் அதிபர் ஆட்சி நடத்த முயற்சி நடைபெறுகிறது. திமுக சார்பில் 520 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

அதில் 483 வாக்குறுதிகள் நிறைவேற்றி இரண்டரை ஆண்டுகளில் 91 சதவிகிதம் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளை அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவார். எனவே ஒன்றிய பாஜ அரசை வீட்டுக்கு அனுப்ப கை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்றார். மாலை 5.55 மணிக்கு தனது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டார்.

The post திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டம்; பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: