ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மதுபான பார் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வடமாநில வாலிபர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். சென்னை, ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில், பிரபல மணல்குவாரி அதிபர் கரிகாலனுக்கு சொந்தமான சேக்மெட் பார் மற்றும் சேமியர்ஸ் ரிகிரியேஷன் கிளப் இயங்கி வருகிறது. இந்த மதுபான பார் தரை தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்டது. ெசன்னையில் உள்ள தனியார் மதுபான பார்களில் பிரபலமான பார் என்பதால் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், ஐடி ஊழியர்கள் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஜோடி, ஜோடியாக வந்து செல்வார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை இந்த பார்களுக்கு வெளியே சில இளைஞர்கள் காத்திருந்தனர். அதேநேரத்தில், பாருக்குள் 20 ஊழியர்கள் பாரை திறப்பதற்கு முன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மாலை 6.45 மணிக்கு பாரின் மேற்கூரை இடிந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

இதில் பாரில் பணிபுரிந்த மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22), திருநங்கை லில்லி (24) மற்றும் சென்னையைச் சேர்ந்த சைக்ளோன் (48) ஆகிய 3 பேர் சிக்கினர். கட்டிடம் இடிந்து விழுவதை கண்டு அந்த அறை மற்றும் 2வது தளத்தில் இருந்தவர்கள், தரை தளத்தில் இருந்தவர்கள், வெளியே நின்றவர்கள் என அனைவரும் ஓலமிட்டபடி நாலாபுறம் சிதறி ஓடினர். பின்னர் விபத்து நடந்த அடுத்த நிமிடமே சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாரின் மேல்தளத்தின் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததால் கான்கிரீட் சுவர் மற்றும் கம்பிகளை வெட்டி அப்புறப்படுத்தி, கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரை மீட்டனர். ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்கப்பட்ட 3 பேரை சோதனை செய்தபோது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இடுபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகர பேரிடர் மீட்புக்குழுவினர் தேடினர்.

மதுபான பார் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் மெட்ரோ சுரங்கப்பணி நடந்து வருகிறது. இதனால் மெட்ரோ பணியின் அதிர்வு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் தர்மராஜ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பார் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை போலீசார் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பினர். கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரின் உரிமையாளர், மற்றும் மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் சுரங்கப்பணி அதிர்வு காரணமாக விபத்து நடந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: