கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, நவீன மருத்துவ வசதிகளுடன் 3,30,000 சதுர அடியில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை அமைத்துள்ளது. இந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம், உடல் நலனை மதிப்பிடுதல், நோய்களை கண்டறிதல், ஆய்வக வசதிகள், வெளிநோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வசதிகள், யோகா, நேச்சுரோபதி. அக்குபன்ச்சர் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சை வசதிகளை அளிக்கும். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய வாழ்த்துச் செய்தி:
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவை மாநகரின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் லட்சுமி குழுமத்தை நிறுவிய ஜி.கே. குப்புசாமி நாயுடு பெயரால் அமைந்த வெளிநோயாளிகள் பிரிவைக் காணொலி வாயிலாகத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமை அடைகிறேன். சேவையுள்ளம் படைத்த ஜி.கே.என் குடும்பத்தினருடன் எனக்கு நீண்ட கால நட்பு உண்டு என்பதை எண்ணி இவ்வேளையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தென்னிந்திய நிறுவனங்களில் முதல் நிறுவனமாகச் சீனாவில் இவர்கள் உற்பத்தி அலகை நிறுவி, அதன் முதல் தயாரிப்பை 2010ம் ஆண்டு நான் துணை முதலமைச்சராக இருந்தபோது ஷாங்காய் நகரத்தில் தொடங்கிவைத்ததையும் எண்ணிப் பெருமைகொள்கிறேன்.

1952ல் துவங்கப்பட்டு, பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மருத்துவமனையாகச் சேவையளித்து வந்த இந்த மருத்துவமனை, பின்னர் 650 படுக்கைகள் கொண்ட பல்துறை மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட்டது. 73 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை வழங்கி வரும் இம்மருத்துவமனைதான் கோவையின் முதல் தனியார் மருத்துவமனை.

மக்கள் இதனையும் அரசு மருத்துவமனை என்றே கருதும் அளவுக்கு லாபநோக்கின்றி அனைவருக்குமான மருத்துவ சேவையை அளித்து வந்துள்ளது தனிச்சிறப்பு. வளர்ந்து வரும் காலத்துக்கேற்றபடி, 3,30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தைத் தொடங்கி இந்திய அளவில் தனி முத்திரையை ஜி.கே.என்.எம் மருத்துவமனை பதித்துள்ளது. அவர்களது பணியும் தொண்டும் மென்மேலும் வளர்ந்து செழிக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

The post கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: