தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு ஜிஎஸ்டி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்: பாஜ பிரமுகர்கள் மீதும் புகார்கள் குவிகின்றன

சென்னை: தொழில் அதிபர்களை மிரட்டி ஜிஎஸ்டி அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் பறிப்பதாக தமிழக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் பெயரைச் சொல்லி மிரட்டி பாஜக நிர்வாகிகளும் பணம் பறித்துள்ளதாக போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக போலீசார் முதல் முறையாக அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதனால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டியபோதெல்லாம் பயந்திருந்த தமிழக தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் தற்போது தைரியாக புகார் கொடுக்க முன் வந்து தகவல்களை போன் மூலம் தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஜிஎஸ்டி துறையில் சென்னையில் பணியாற்றிய ஒரு கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர், ஒரு தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க அவரை மிரட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அடித்து, உதைத்து பல கோடி ரூபாய் பணம் பறித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றிய அரசிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மேற்கு வங்கத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தொழில் அதிபர் தவறு செய்திருந்தால் கைது செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், சட்டவிரோதமாக கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கடத்திச் சென்று பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது மிகப் பெரிய கிரிமினல் குற்றம். ஒன்றிய அரசின் அதிகாரிகள் என்ன செய்தாலும் கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் தொழில் அதிபர்கள் பயந்துபோயிருந்தனர். தற்போது இதுபோன்ற புகார்கள் தமிழக போலீசுக்கு வரத் தொடங்கியுள்ளது.

இதேபோல ஜிஎஸ்டி அதிகாரிகள் சிலர் மிரட்டி பணம் பறிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் ஜிஎஸ்டி அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை வரும், வழக்குகளில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறி சில பாஜக நிர்வாகிகள் மீதும் தற்போது புகார்கள் தமிழக போலீசாரிடம் வரத் தொடங்கியுள்ளன. இதனால் ஒன்றிய அரசின் அதிகாரிகளோடு, பாஜ நிர்வாகிகளும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலை சூடேற்றியுள்ளன.

The post தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு ஜிஎஸ்டி அதிகாரிகளும் சிக்குகிறார்கள்: பாஜ பிரமுகர்கள் மீதும் புகார்கள் குவிகின்றன appeared first on Dinakaran.

Related Stories: