இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமய பெரியோர்கள், ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, அதிகாலை நாலாவது கால யாகசாலை வழிபாடும், அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து திருக்கலசங்கள் புறப்பட்டு, அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது : தொன்மை வாய்ந்த கோயில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த பிறகு குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களுக்கு உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் குடமுழுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோயிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற கோயில்களுக்கும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றுள்ளது. கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோயில்களுக்கும் 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோயில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022-23ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023 – 24ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022-23ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோயில்களும், 2023-24ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோயில்களும் அரசு மானியம், கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோயில்களின் வைப்பு நிதி ரூ. ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் நமது முதலமைச்சர். மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-2023ம் நிதியாண்டில் 2,000 கோயில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-24ம் நிதியாண்டில் 2,000 கோயில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. ஒரு கால பூஜை திட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோயில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் 1,030 கோயில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும். இந்த நன்னீராட்டு பெருவிழாவில் பங்கேற்று பொருளுதவி அளித்த உபயதாரர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு உயர் அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கௌமார மடம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post திமுக அரசு பொறுப்பேற்ற பின் சென்னை கோயிலில் 1000வது குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.