குன்னூர்:உலக புகழ் பெற்ற நீலகிரி மலை ரெயில் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்றது. இந்த மலை ரெயில் 1908-ம் ஆண்டு முதல் 111-வது ஆண்டாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.மேட்டுப்பாளையத்தில் இருந்து பல மலைகள், செங்குத்தான பாதை வளைவுகள், சுரங்கப்பாதைகள் என 46 கி.மீ. தூரம் கடந்து ஊட்டிக்கு செல்கிறது.
இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் பயணம் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 2 மாதத்துக்கு முன் மலை ரெயிலை முன்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து லண்டன், ரஷியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 71 பேர் குன்னூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இதில் 12 குழந்தைகள் முதல் 84 வயதான முதியவர்களும் அடங்குவார்கள்.பின்னர் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரெயிலில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக மலை ரெயிலை ரூ. 2 லட்சத்து 766-க்கு வாடகைக்கு எடுத்து இருந்தனர்.
முன்னதாக குன்னூர் நீராவி என்ஜின் பணிமனைக்கு சென்று நீராவி என்ஜின் குறித்து விசாரித்து குறிப்புகளை எடுத்து கொண்டனர்.ஊட்டிக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர்