கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் கொடநாடு காட்சி முனை மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகியவை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.
சுற்றுலா பயணிகள் மையங்களை கண்டு களித்து செல்கின்றனர்.கோத்தகிரி - கூக்கல்தொரை சாலையில் அமைந்துள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி, சமீபகாலமாக, சிறந்த சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. பாறை இடுக்குகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவதால், சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள் இப்பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, இச்சாலையில் கன்னேரிமுக்கு பகுதியில், மாவட்டத்தின் முதல் கலெக்டர் அலுவலகமான, ஜான் சலீவன் நினைவிடத்திற்கு வருபவர்கள், நீர்வீழ்ச்சியை காண தவறுவதில்லை.கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அளவு, வெகுவாக அதிகரித்துள்ளது. ஆபத்தை உணராத இளைஞர்கள், பாசி படர்ந்த பாறையில், மகிழ்ச்சியுடன் குளிக்கும் போது, வழுக்கி விழும் பட்சத்தில், 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழக்க நேரிடும். கடந்த காலங்களில், இங்கு குளித்தவர்களில், மூவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், நீர்வீழ்ச்சியை சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும். மேலும், பார்வையாளர்கள் மாடம் அமைத்து, சிறந்த சுற்றுலா தலமாக மாற்றினால், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதுடன், சுற்றுலா பயணிகளால், அரசுக்குவருவாய் கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது,' என்றனர்.