தியாகதுருகம் : கல்வராயன் மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.இயற்கை எழில் சூழ்ந்த கல்வராயன் மலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக மேகம், பெரியார், வெள்ளி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. படகு சவாரி செல்லும் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது.இதனால் விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர்.
அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அருவி அமைந்துள்ள பகுதி எவ்வித பராமரிப்பும் இன்றி அசுத்தமாக உள்ளது. உடைக்கப்பட்ட மது பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகளவில் சிதறிக் கிடக்கின்றன.அருவியில் தண்ணீர் கொட்டும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், இங்கு குளிப்பவர்கள் காயமடைகின்றனர்.அருவிக்கு பெண்கள், குழந்தைகள் அதிகளவில் வருவதால் இங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாதது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சிலர் மது அருந்திவிட்டு போதையில் தகராறில் ஈடுபடுவதும் நடக்கிறது.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் தினங்களில் கரியாலுார் போலீசார் பெரிய அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோன்று படகு சவாரி செய்பவர்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படுவதில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் அபாயத்தில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.மலைப்பாதையில் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அபாயகரமான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை அறிந்து கொள்ள குவியாடி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும்.விபத்து நிகழ்ந்து பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.