சென்னை: ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 3,400 குடும்பங்களுக்கு கொசுவலைகளை அமைச்சர் சேகர்பாபு இன்று வழங்கினார். இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விலையில்லா கொசுவலை வழங்கும் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் வசிக்கும் 1500 குடும்பங்களுக்கு கொசு வலைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களுக்கும், வார்டு-54க்குட்பட்ட உட்வார்ஃப் சாலை முதல் தெரு மற்றும் 3ஆவது தெருவில் வசிக்கும் 800 குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலைகளை இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் நீர்நிலைகளை ஒட்டி இருக்கும் 14,000 குடும்பங்களுக்கு கொசுவலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக, இராயபுரம் மண்டலம், சத்யவாணி முத்து நகர். ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வர்ப் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 3400 குடும்பங்களுக்கு இன்று கொசுவலைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை மற்றும் வண்டல் போன்ற கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கொசுப்புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சாக நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் க. சரஸ்வதி, ராஜேஷ் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ராயபுரம் பகுதிகளில் 3,400 குடும்பங்களுக்கு கொசுவலைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.