தியாகதுருகம், மார்ச் 27: தியாகதுருகம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவியின் மகன் ஜெகன் ஸ்ரீ(19). கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது தந்தை ஜெய்சங்கர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அங்கமுத்து மகன் ஐயப்பன் (32) என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரும் சேர்ந்து ஜெகன் ஸ்ரீயை கூத்தக்குடி காப்புக்காடு வனப்பகுதிக்கு மது குடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு ஜெகன் ஸ்ரீயை முன்விரோதம் காரணமாக பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து மரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். பிறகு ஒன்றும் தெரியாதது போல் அந்த 4 பேரும் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசார் விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ஜெகன் ஸ்ரீ மொபைல் எண் சம்பவத்தன்று செல்போன் சிக்னலுக்கான டவர் இடத்தை ஆராய்ந்த போது இவர்களது எண்ணும் அந்த டவரில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவலும் வெளியானது. அப்போது அவர்கள் ஜெகன் ஸ்ரீயை கொலை செய்து பள்ளம் தோண்டி புதைத்ததாக தெரிவித்தனர்.
பின்னர் புதைக்கப்பட்ட இடத்துக்கு ஐயப்பனை டிஎஸ்பி ரமேஷ், வட்டாட்சியர் சத்யநாரயணன் மற்றும் போலீசார் அழைத்து சென்று, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து ஜெகன் யின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அங்கமுத்து மகன் ஐயப்பன் (32), ரவிச்சந்திரன் மகன் அபிலநாதன் (27), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.