பெரம்பலூர் அருகே இன்று கோர விபத்து; பாதயாத்திரை வந்த 4 பெண் பக்தர்கள் பரிதாப பலி: சென்னை வாலிபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் இறந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி கடந்த 3 நாட்களுக்கு முன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதேபோல் சேலத்தில் இருந்தும் ஒரு குழுவினர் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக வந்தனர். இவர்கள் ஒரே குழுவாக இணைந்து இன்று (31ம் தேதி) அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மேம்பாலம் தாண்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தனர். இந்த குழுவில் சுமார் 60 பேர் இருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் திடீரென தாறுமாறாக சென்று பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. இந்த விபத்தில் மலர்க்கொடி (35), சசிகலா(47), விஜயலட்சுமி(40) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜோதிலட்சுமி(57), சித்ரா(40) ஆகிய 2 பெண்கள் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த சித்ரா, ஜோதிலட்சுமி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். ஜோதிலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியான மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ராவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: